பரபரக்கும் விவசாயிகள்... புழுதி பறக்கும் வயல்கள்: மேட்டூர் திறப்பால் சாகுபடிக்கு மும்முரம்
சி, டி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் எளிதாக தண்ணீர் வரும் என்பதால் விவசாயிகள் வெகு தீவிரமாக வயலை உழும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: மேட்டூர் அணை திறக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக தங்கள் வயல்களை தயார்படுத்தி நாற்று விடும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள சி, டி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் எளிதாக தண்ணீர் வரும் என்பதால் விவசாயிகள் வெகு தீவிரமாக வயலை உழும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம்தான் பிரதான தொழில். இயற்கை வாழ வைத்தாலும், வாட்டினாலும் விவசாயத்தை கைவிடாதவர்கள்தான் விவசாயிகள். விவசாயி அளந்து பார்த்தால் ஒன்றும் மிஞ்சாது என்பார்கள். அதிலும் தொடர் மழையோ, தண்ணீர் வரத்து இல்லாமலோ இருந்தால் விவசாயிகள் சாகுபடிக்கு செலவு செய்யும் பணம் கடன் அரக்கனாக மாறி அவர்களை அழித்து விடும். இருந்தாலும் உயிர் மூச்சே விவசாயம் என்று நினைப்பவர்கள்தான் விவசாயிகள்.
காவிரி டெல்டா மாவட்டத்தில் முக்கியமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி நடந்து வருகிறது. சில பகுதிகளில் கோடை சாகுபடியாகவும் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டது. தண்ணீர் வராத நிலையில் பல விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை. இதனால் 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டு குறுவை சாகுபடி குறைந்தது.
இந்தாண்டு வழக்கம் போல் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளும் நடந்துள்ளன. தண்ணீர் திறக்கப்படும் என்பது உறுதியான நிலையில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக வயலை உழும் பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளனர்.
இதில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, மருங்குளம், வேங்கராயன் குடிக்காடு உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக வயலை உழுது நாற்றுவிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த மே மாதத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழை தற்போது வயலை தயார்படுத்தும் பணிக்கு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது.
இவ்வாறு வயலை தயார்படுத்துவதால் மேட்டூரில் இருந்து எப்போது தண்ணீர் திறக்கப்பட்டாலும் குறுவை சாகுபடியை உடன் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். வயல்களில் இருந்த களைகள் அப்புறப்படுத்தப்பட்டு டிராக்டரை கொண்டு உழவுப்பணி நடந்து வருகிறது. தண்ணீர் திறப்பதற்குள் இந்த பகுதியில் மற்ற விவசாயிகளும் வயலை உழும் பணியில் இறங்கி விடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில விவசாயிகள் நாற்று விடும் பணிகளிலும் இறங்கி விட்டனர்.
இதுகுறித்து வேங்கராயன்குடிகாட்டை சேர்ந்த விவசாயி முத்து கூறுகையில், தற்போது டிராக்டரை கொண்டு உழுவதால் வயல் சமமாகி மேடு பள்ளமின்றி இருக்கும். மேலும் நுண்ணுயிர்கள் பெருகி வயல் வளம் கூடும். களைகளும் மடங்கி மண்ணுக்கு உரமாகும். இப்பகுதியில் உள்ள பல விவசாயிகள் நாற்றுவிடும் பணிகளிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். இப்பகுதியில் கடந்தாண்டு குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கும் பருவம் தவறி பெய்த மழையால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. இந்தாண்டு குறுவை சாகுபடி அமோகமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பணிகளை தொடங்கி உள்ளோம் என்றார்.





















