அனிரூத்... சாய் அபயங்கருக்கு போட்டியாக இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா பேரன்! முதல் பாடல் வெளியானது!
இசை கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படுவர் இளையராஜா. இவரது பேரன், யத்தீஸ்வர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி தன்னுடைய முதல் பாடலை வெளியிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜாவை தொடர்ந்து, அவருடைய 2 மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் இசை துறையில் கால் பதித்த நிலையில், தற்போது இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர் ராஜாவும் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி உள்ளார்.
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, தன்னுடைய தந்தையின் இசை பணிகளை கவனித்து வருகிறார். அது மட்டும் இன்றி இசையமைப்பாளராகவும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளியான படங்கள் பெரிதாக கவனிக்கப்படவில்லை. எனவே யுவன் சங்கர் ராஜா அளவுக்கு கார்த்திக் ராஜா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாமல் உள்ளார். அதே போல் இளையராஜாவின் மகள் பவதாரிணி தேசிய விருது பாடகியாவார். ஒரு சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். அழகிய குரல் வளமும், திறமையும் இருந்தும், பவதாரிணி கடந்த ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
இளையராஜாவின் பிள்ளைகள் இசை துறையில் கலக்கி வரும் நிலையில், அவருடைய தம்பி கங்கை அமரன் மற்றும் அவருடைய மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம் ஜி ஆகியோரும் தற்போது சினிமாவில், தங்களது பன்முக திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெங்கட் பிரபு முன்னணி இயக்குனராகவும், பிரேம் ஜி நடிகராகவும் உள்ளார்.
இந்த நிலையில் தான், தற்போதைய இளம் இசையமைப்பாளர்களான அனிரூத், சாய் அபயங்கர் ஆகியோர்க்கு டஃப் கொடுக்கும் விதமாக, இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர் ராஜா தற்போது பக்தி பாடல் மூலம் தன்னுடைய இசை பணியை துவங்கியுள்ளார். திருவண்ணாமலை, அண்ணாமலையாரின் தீவிர பக்தரான யத்தீஷ்வர் ராஜா தன்னுடைய முதல் பாடலை அண்ணாமலையாருக்காக இசையமைத்து பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை உருவாக்குவதற்கு தாத்தா இளையராஜா சில ஆலோசனைகளை வழங்கியதாகவும், அப்பா வரிகள் எழுத உதவியதாகவும் கூறி உள்ளார்.
இந்த பாடலை யத்தீஸ்வர் ராஜா இசையமைத்து, பாடி அதனை திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். மேலும் இசை குறித்து பேசி உள்ள யத்தீஸ்வர் ராஜா, சிறு வயது முதலே இசையின் மீது தனக்கு ஆர்வம் இருந்ததாகவும்... தற்போது விஸ்காம் படித்து முடித்துள்ள நிலையில், இசையை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும் விதமாக மேல் படிப்புக்கு லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய மகன் குறித்து பேசியுள்ள கார்த்திக் ராஜா, ஒருமுறை திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் போது அங்கு ஒலிக்கப்படும் பக்தி பாடல்களை கேட்ட யத்தீஸ்வர் ராஜா தானும் அப்படி ஒரு பக்தி பாடலை உருவாக்க வேண்டும் என ஆசைப்பட்டு என்னிடம் கூறினார். அதன் அடிப்படையில் இந்த பாடல் உருவாகியிருக்கிறது. எங்கள் குடும்பத்தில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர் உருவாவது அனைவருக்குமே பெரும் மகிழ்ச்சி தான் என்றாலும், அதே நேரம் சற்று பயமாகவும் இருக்கிறது. தன்னுடைய மகனின் பாடல்களை கேட்டுவிட்டு மக்கள் தான் அவரை வாழ்த்த வேண்டும் என கூறியுள்ளார். இசையின் ஞானியின் வாரிசு தற்போதைய இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















