TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TN Engineering Admission 2025: பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு செய்த மாணாக்கர்கள் தங்களது சான்றிதழ்களை 09.06.2025-க்குள் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி இன்று 06.06.2025 நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டப் பணிகள் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. ஜூன் 06ஆம் தேதி (06.06.2025) நள்ளிரவு 12 மணி வரை 3,02,374 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் மொத்தம் 2,49,883 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். அதேபோல 2,26,359 பேர் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய நாளை கடைசி
விண்ணப்ப பதிவு செய்த மாணாக்கர்கள் தங்களது சான்றிதழ்களை 09.06.2025-க்குள் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பி.ஆர்க். படிப்பிற்கான NATA நுழைவுத்தேர்வு ஜுன் இறுதி வாரம் வரை நடைபெற இருப்பதால் B.ARCH. படிப்பிற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றங்களை 30.06.2025 வரை மேற்கொள்ளலாம்.
துணைக் கலந்தாய்வு எப்போது?
HSC துணைத்தேர்வு (Supplementary) முடிவுகள் வெளிவந்தவுடன், தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை (TNEA) துணைக் கலந்தாய்வுக்கான (Supplementary Counselling) விண்ணப்ப பதிவு தேதி அறிவிக்கப்படும்.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு அவர்களின் விளையாட்டு சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் மூலம் 02.06.2025 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி 13.06.2025 வரை நடைபெறும்.
தனித்தனியாக குறுந்தகவல்
அவர்களுக்கான கால அட்டவணை விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறுந்தகவல் மூலமாக ஒவ்வொருவருக்கும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
மாணாக்கர்களுக்கு எதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேரக்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன.
கூடுதல் தகவல்களைப் பெற
அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.






















