Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா மீது ஒரு முறை ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில், ரஷ்யா விடாமல் உக்ரைனை அடித்து நொறுக்கி வருகிறது. அதன்படி, நேற்றிரவும் பிரமாண்ட தாக்குதலை நடத்தியுள்ளது.

கடந்த வாரம், ரஷ்யா மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதன் பிறகு, அதற்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிய ரஷ்யா, ஏற்கனவே 2 முறை ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்றிரவும் 479 ட்ரோன்களை ஏவி மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசிய ரஷ்யா
உக்ரைனுக்கான பதிலடியாக, ரஷ்யா நேற்றிரவும் பிரமாண்ட ட்ரோன் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. உக்ரைனின் மத்திய கிழக்குப் பகுதிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரே இரவில், 479 ட்ரோன்கள் மற்றும் 20 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளது. அங்கு, ரிவ்னே பகுதியில் உள்ள டப்னோ விமான தளத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ட்ரோன்கள், ஏவுகணைகளை இடைமறித்து தாக்கிய உக்ரைன்
ரஷ்யாவின் இந்த பிரமாண்ட தாக்குதலின்போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக அந்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
Overnight, russian invaders launched a massive missile attack on Ukraine, using 20 missiles of various types and a record number of strike UAVs — 479.
— Defense of Ukraine (@DefenceU) June 9, 2025
Ukrainian air defenders destroyed 479 aerial targets:
- 10 Kh-101 cruise missiles
- 4 Kh-47 M2 Kindzhal missiles
- 2 Kh-22… pic.twitter.com/5HiXXh4cxp
இதனிடையே, இரவு நேரங்களில் ட்ரோன்களை கண்டுபிடித்து அழிப்பது கடினம் என்பதால், இரவு நேரத்திலேயே ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால், சில பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா
ஏற்கனவே, உக்ரைனுக்கான பதிலடியின் ஒரு பகுதியாக, ஒரு நாள் முன்பு, 400 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்தியது ரஷ்யா. அந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தினார். கிவ்-வில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவசரகால உதவியாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள செர்னிஹிவ்-வில் 2 பேரும், லட்ஸ்க் நகரில் ஒருவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த ட்ரோன் தாக்குதல் உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் இன்னும் பல நகரங்களிலும் நடத்தப்பட்டது. அதில் உக்ரைனின் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல அரசு கட்டடிங்கள் மற்றும் தனியார் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் நிலத்தடி தங்குமிடங்களில் பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்தனர். அந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உக்ரைனுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட முதல் தாக்குதல்
ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, 3 நாட்களுக்கு முன்னர், உன்ரைன் மீது ரஷ்யா ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் ப்ரிலுகி நகரின் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதலில், 1 வயது குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யாவின் ட்ரோன்கள் ப்ரிலுகி நகரின் குடியிருப்புப் பகுதிகளை அதிகாலையில் தாக்கியதாகவும், அதில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் உன்ரைன் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
ப்ரிலுகி நகரின் மீதான தாக்குதல் நடந்து சில மணி நேரங்களில் கார்கிவ்வின் கிழக்குப் பகுதியில் உள்ள ஸ்லேபிட்ஸ்கி நகரிலும் ரஷ்யாவின் ட்ரோன்கள் தாக்கியுள்ளன. அதில் குழந்தைகள் உட்பட சுமார் 17 பேர் காயமடைந்ததாக பிராந்திய ஆளுநர் ஓலே சைனிஹுபோவ் தெரிவித்திருந்தார்.
ட்ரேன்கள் 2 அடுக்குமாடிக் குடியிருப்புகளை தாக்கியதாகவும், அந்த தாக்குதலின்போது சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் கூறினார்.
உக்ரைன் ஒரு முறை ட்ரோன்களை வைத்து தாக்கிய நிலையில், பதிலடி கொடுப்பதாகக் கூறிய ரஷ்யா, தற்போது 3-வது முறையாக பிரமாண்ட ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ஏற்கனவே உக்ரைன் மீது கடும் கோபத்தில் இருந்த ரஷ்யா, தற்போது தொடர் தாக்குதல்களை நடத்திவருகிறது. இதனால், உக்ரைன் கதிகலங்கியுள்ளது.





















