பழனி : நெய்க்காரபட்டியில் ராஜாமுகமது என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
தமிழகத்தில் 60 இடங்களில் NIA சோதனையை தொடர்ந்து பழனி அருகே நெய்க்காரபட்டியில் ராஜாமுகமது என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் கடந்தாண்டு உக்கடத்தில் நடைபெற்ற கார் வெடிப்பு விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், வெடித்து சிதறிய காரில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டு மருந்து பொருட்கள் இருந்ததால் இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கினர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி வந்த நிலையில், சில முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை முதல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 60 இடங்களில் என்,ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை, நெல்லை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு அக்டோபர் 23-ந் தேதி நடைபெற்ற உக்கடம் அருகே கார் வெடித்த வழக்கில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் ஜமேசா முபின் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர் அதனடிப்படையில் இன்று இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பள்ளிவாசல் அருகில் வசித்து வருபவர் ராஜா முகமது (35).இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன. ராஜா முகமது தேங்காய் குடோனில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிமுதல் ராஜாமுகமது வீட்டில் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இவர் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேராதவர் என்றும், எந்த ஒரு அமைப்பிலும் இவர் இல்லாதவர் என்றும் தெரிகிறது. எந்த அமைப்பிலும் இல்லாத ராஜா முகமதுவின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பழனியில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் மூன்று நாட்கள் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது நெய்க்காரபட்டியில் என்ஐஏ அதிகாரிகள் முகாமிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்