IND vs ENG Test: இங்கிலாந்தை கலங்கடிக்குமா இந்தியா? கோட்டை விட்ட கோலி, ரோகித் - சாதிப்பாரா சுப்மன் கில்?
IND vs ENG Test Head To Head: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

IND vs ENG Test Head To Head: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் யார் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நாளை தொடங்குகிறது. முதல் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் இந்திய நேரப்படி, பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமயில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதன் மூலம், நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுக்கான முதல் தொடரையும் இந்தியா தொடங்குகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடந்த கால போட்டிகளின் விவரங்கள், யார் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பது குறித்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியா - இங்கிலாந்து: ஹெடிங்லே மைதானம்
பழமையான கிரிக்கெட் வரலாறு கொண்ட ஹெடிங்லே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 7 முறை மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டிகள் இந்த மைதானத்தில் தொடர்ந்து நடைபெறுவதில்லை. சில நேரங்களில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை கூட இடைவெளி ஏற்பட்டுள்ளது. கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2021ம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தது. அதற்கு முன்னதாக 1986 மற்றும் 2002ம் ஆண்டுகளில் நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் இங்கு 7 முறை நேருக்கு நேர் மோதியதில், இங்கிலாந்து நான்கு முறையும், இந்தியா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து: சாதிப்பாரா கில்?
இங்கிலாந்து உடனான நீண்ட டெஸ்ட் கிரிக்கெட் மோதல் நீண்ட வரலாற்றுடன், கடந்த 1932ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி கடைசியாக டெஸ்ட் தொடரை வென்று கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் ஆகிவிட்டது. கடைசியாக 2007ம் ஆண்டு ராகுல் ட்ராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் தொடரை வென்றது. அதன் பிறகு கோலி மற்றும் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா சர்வதேச போட்டிகளில் கோலோச்சினாலும், இங்கிலாந்தில் மட்டும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாத நிலையே தொடர்கிறது. 2021ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தபோது, கொரோனா காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு 2022ல் நடைபெற்ற கடைசி போட்டியில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது. எனவே இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற 18 ஆண்டுகால ஏக்கத்தை, சுப்மன் கில் தலைமையிலான இளம் படை பூர்த்தி செய்யுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து: டெஸ்டில் நேருக்கு நேர்
டெஸ்ட் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 36 தொடர்களில் விளையாடியுள்ளன. அதில் இங்கிலாந்து அணி 17 தொடர்களிலும், இந்தியா 11 தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 8 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 136 போடிட்களில் விளையாடியுள்ள இந்தியா, 35 போட்டிகளில் வெற்றி, 51 போட்டிகளில் தோல்வி மற்றும் 50 போட்டிகளில் ட்ராவை பதிவு செய்துள்ளது. இந்தியா 10 அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக தான் அதிக போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டிற்கு எதிராக களம் கண்ட 67 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றிகளை மட்டுமே இந்தியா பதிவு செய்துள்ளது. 36 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற, 22 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.
இந்தியா - இங்கிலாந்து: சாதனைகள்:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் தனிநபர்கள் படைத்த சாதனைகள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் - சச்சின் டெண்டுலர் - 2535 ரன்கள் (100/50 - 7/13)
- அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் - ஜோ ரூட் - 2,846 ரன்கள் (100/50 - 10/11)
- அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் - அஷ்வின் - 114 விக்கெட்டுகள்
- அதிக விக்கெட் எடுத்த இங்கிலாந்து வீரர் - ஆண்டர்சன் - 149 விக்கெட்டுகள்
- ஒரு இன்னிங்ஸில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் - 759/7 டிக்ளேர் (சென்னை, 2016)
- ஒரு இன்னிங்ஸில் இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் - 710/7 டிக்ளேர் (பிர்மிங்ஹாம், 2011)
- ஒரு இன்னிங்ஸில் இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் - 75 ரன்கள் (சென்னை, 2016)
- ஒரு இன்னிங்ஸில் இங்கிலாந்தின் குறைந்தபட்ச ஸ்கோர் - 81 ரன்கள் (லார்ட்ஸ், 1974)
- இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி - இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2016
- இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய வெற்றி - இன்னிங்ஸ் மற்றும் 285 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, 1974
- இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் - கருண் நாயர், 303* - 2016
- இங்கிலாந்து வீரரின் அதிகபட்ச ஸ்கோர் - கிரஹாம் கொச், 333 - 1990




















