Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ஈரானின் உச்ச தலைவர் காமேனிக்கு ட்ரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல், போர் தொடங்கிவிட்டதாக அவர் அறிவித்துள்ளார். காமேனி என்ன கூறியுள்ளார் என பார்ப்போம்.

ஈரான் தலைவர் காமேனி எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது தெரியும், ஆனால் இப்போதைக்கு அவரை கொல்ல மாட்டோம் என மிரட்டும் வகையில் ட்ரம்ப் பதிவிட்ட போதிலும், அதற்கு அசராத காமேனி, போர் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.
“போர் தொடங்கிவிட்டது, இஸ்ரேலியர்கள் மீது இரக்கம் காட்ட மாட்டோம்“
ட்ரம்ப் விடுத்த மிரட்டலுக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ள ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி, கடவுளின் பெயரால் போர் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு பலமான பதிலடி கொடுக்க வேண்டும் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், இஸ்ரேலியர்கள் மீது இரக்கம் காட்ட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால், உலக அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப் கூறியிருந்தது என்ன.?
கனடாவில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற ட்ரம்ப், அங்கிருந்து பாதியிலேயே அமெரிக்கா திரும்பிய நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் வரிசையாக பதிவுகளை போட்டார். அதில், ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியிருந்தார்.
அவர் எங்களுக்கு எளிதான இலக்கு, ஆனால் அங்கு அவர் பத்திரமாக இருக்கிறார். அவரை நாங்கள் வெளியே கொண்டுவரப் போவதில்லை(கொலை), குறைந்தது இப்போதைக்கு இல்லை என, மிரட்டல் தொனியில் ட்ரம்ப் பதிவிட்டார். ஆனால், மக்களோ, படைவீரர்களோ ஏவுகணைகளால் தாக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனாலும், எங்கள் பொறுமை குறைந்துகொண்டே வருகிறது என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஹைபர்சானிக் ஏவுகணைகளை வீசிய ஈரான்
ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பதிலளித்தது மட்டுமல்லாமல், இஸ்ரேல் மீது ஹைபர்சானிக் ஏவுகணைகளையும் வீசியுள்ளது ஈரான். இது குறித்து தெரிவித்துள்ள ஈரானிய படை, ஃபத்தாஹ் 1 ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஊடகம் ஒன்றின் மூலமாக, பெருமைமிகு ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3-ன் 11-வது அலை நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், போர் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளின் வான்பரப்பு முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதோடு, ஃபத்தாஹ் 1 வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி முன்னேறிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானிய படை தெரிவித்துள்ளது.
ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பின்னரே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பதிலடி கொடுத்த இஸ்ரேல்
இதனிடையே, இஸ்ரேலும் டெஹ்ரான் அருகே உள்ள தங்களது கோஜிர் ஏவுகணை தயாரிப்பு மையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பு மையம் மீது, கடந்த 2024-ம் ஆண்டே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி, இரு நாடுகளும் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், ட்ரம்ப்பின் முடிவையே தற்போது உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. ஒருவேளை அமெரிக்கா தாக்கத் தொடங்கினால், இது மிகப்பெரும் போராக உருவெடுத்துவிடும் என்பதே, தற்போது உலக நாடுகளின் கவலையாக உள்ளது.





















