’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
‘’நான் 18 ஆண்டாக நீதிபதியாக இருக்கிறேன். இத்தகைய அதிகாரம் (கைது செய்ய உத்தரவிடுவது) இருப்பது எனக்கே தெரியவில்லை’’ நீதிபதி மன்மோகன்.

ஏடிஜிபி ஜெயராமின் இடை நீக்க உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து அரசிடம் ஆலோசனை பெற்று தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் திருமணம் தொடர்பான கட்டப் பஞ்சாயத்து விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில், ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, காவல் துறையின் பரிந்துரையின்பேரில் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். அதேநேரம், தன் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்யக்கோரிய ஜெயராமன் உச்ச நீதிமன்றத்தை நாடினார். சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய உயர் பொறுப்பில் உள்ள ஏடிஜிபியே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியது.
24 மணி நேர விசாரணை
இந்த நிலையில் 24 மணி நேர விசாரணைக்குப் பிறகு, தனது சொந்த காரில் ஜெயராம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதை நீதிபதிகள் உஜ்ஜால் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இதில், ’’ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்படவில்லை, காவலில் மட்டும் 24 மணி நேரம் வைக்கப்பட்டார்’’ என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அவர் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’’அவர் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி. இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பெற்றுள்ளீர்கள்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அவர் விசாரணைக்கு ஆஜராவாரா என்று கேள்வி எழுந்ததாக தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், ’’அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறாரே. மூத்த காவல் அதிகாரியை நீங்கள் இவ்வாறு செய்யக்கூடாது’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறுங்கள்
இதனால் சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறுவது குறித்து அரசின் ஆலோசனை பெற்றுத் தெரிவிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை நாளை விசாரிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ‘’நான் 18 ஆண்டாக நீதிபதியாக இருக்கிறேன். இத்தகைய அதிகாரம் (நீதிபதி கைது செய்ய உத்தரவிடுவது) இருப்பது எனக்கே தெரியவில்லை’’ என்றும் நீதிபதி மன்மோகன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.






















