“நான் போலீஸ் இந்த நேரத்துல எங்க போறீங்க” - கார் டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
விழுப்புரத்தில் போலீஸ் எனக்கூறி தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவர் கைது.

விழுப்புரம்: விழுப்புரத்தில் போலீஸ் எனக்கூறி தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவரை தாலுக்கா போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர், சென்னையில் பணி செய்து வரும் இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படவே பெரம்பலூரில் உள்ள தனது காதலனான தாய்மாமன் மகனை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது காதலன் உடல்நலம் சரியில்லை என்பதால் கிளம்பி விழுப்புரம் வந்துவிடு இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறியதால் இரவு பேருந்து மூலம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வருகை புரிந்து அதிகாலை 4 மணியளவில் தனது காதலனுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளனர்.
அப்போது பேருந்து நிலையத்தில் இருந்து ஏடிஎம் மையத்திற்கு பின் தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த இளைஞர் ஒருவர் காதல் ஜோடி இருவரையும் வழிமறித்து, தான் போலீஸ் எனக்கூறி இந்த நேரத்தில் எங்கிருந்து வருகிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் எனக்கேட்டு மிரட்டியுள்ளார். அப்பெண்ணின் காதலனை திட்டி தாக்கி மிரட்டி அனுப்பி வைத்துவிட்டு அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அழைத்துச் சென்று பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். உடனே அப்பெண், விழுப்புரம் தந்தை பெரியார் நகர் குடியிருப்பு அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து 1,000 ரூபாயை எடுத்து கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்து அப்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று ஜானகிபுரம் புறவழிச்சாலையில் பாலியல் தொல்லை கொடுத்து மிராட்டியதால் இளம்பெண் கூச்சலிடவே இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற நபர் பெண்னை விட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளார். இதையடுத்து இளம்பெண், தனது காதலனை தொடர்புகொண்டு ஜானகிபுரம் புறவழிச்சாலை பகுதிக்கு வரவழைத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் சித்தேரி கிராமத்தை சேர்ந்த கார் டிரைவரான லாரன்ஸ் (36) என்பது தெரியவரவே கோலியனூர் பகுதியில் மறைந்திருந்தவரை கைது செய்தனர்.
கைதான லாரன்ஸ் மீது சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செல்போன் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.போலீஸ் எனக்கூறி காதலனை தாக்கி அனுப்பிவிட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது





















