10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு; துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?
கம்பார்ட்மெண்ட் பிரிவில் வைக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் தேர்வர்களின் பட்டியலை (List of Candidates - LOC) பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில், 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். அதாவது தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க, ஜூன் 19ஆம் தேதி கடைசி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது துணைத் தேர்வுகள்?
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 15ஆம் தேதி அன்று தொடங்க உள்ளன. 2024- 25ஆம் கல்வி ஆண்டு பாடத்திட்டத்தின்படி, தேர்வுகள் நடைபெற உள்ளன.
முக்கிய வழிமுறைகள்
கம்பார்ட்மெண்ட் பிரிவில் வைக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் தேர்வர்களின் பட்டியலை (List of Candidates - LOC) பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல, மறு மதிப்பீடு, மறு கூட்டல் கோரிய மாணவர்களுக்கும் இந்த எல்ஓசியை பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறும் மாணவர்களின் பெயர்கள், துணைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
எவ்வளவு பேர் தேர்ச்சி?
2024- 25ஆம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 15-ல் தொடங்கி, ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 19,299 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், 7330 தேர்வு மையங்களில் எழுதினர். 16 லட்சத்து 92,794 பேர் தேர்வை எழுதிய நிலையில், 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 88.39% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.41 சதவீதம் அதிகம் ஆகும்.
மாணவிகளைப் பொறுத்தவரையில், 91.64 சதவீதம் பேரும் மாணவர்கள் 85.7 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் வழக்கம்போல மாணவிகளே மாணவர்களைக் காட்டிலும் 5.94 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றது தெரிய வந்தது.
மாணவர்களும் பள்ளிகளும் cbseacademic.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்து, துணைத் தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணையை அறியலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://cbseacademic.nic.in/






















