(Source: Poll of Polls)
IND Vs ENG: இந்தியாவின் இளம்படையும், இங்கிலாந்தின் பேரனுபவமும் - கில் முன்னே உள்ள சவால்கள், ரூட் எனும் அரக்கன்
IND Vs ENG Test Gill: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ள சிக்கல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

IND Vs ENG Test Gill: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
கில் தலைமையிலான முதல் டெஸ்ட் தொடர்:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டில் நாளை ஹெடிங்லே மைதானத்தில் தொடங்குகிறது. புதிய கேப்டனான கில் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ள முதல் போட்டி இதுவாகும். 25 வயதே ஆன நிலையில் அவரிடம் கேப்டன் பதவி வழங்கப்பட்டதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பல முன்னாள் வீரர்கள் எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், பல்வேறு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் கில் இருக்கிறார். அதேநேரம், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் சமாளிக்குமா என்பதே முதல் சவாலாக உள்ளது.
கில்லின் டெஸ்ட் இளம்படை
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் அதிகபட்சமாக ஆல்-ரவுண்டர் ஜடேஜா, 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரை தொடர்ந்து கே.எல். ராகுல், 53 போட்டிகளிலும், ரிஷப் பண்ட் 43 போட்டிகளிலும், பும்ரா மற்றும் சிராஜ் தலா 45 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். இந்திய அணியின் புதிய கேப்டனான கில் 32 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஜெய்ஷ்வால், சாய் சுதர்ஷன், ஈஷ்வரன் மற்றும் கருண் நாயர் ஆகியோர் கிட்டத்தட்ட புதிய வீரர்களாகவே கருதப்படுகின்றனர். புதிய வீரர்கள் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளனர். ஆனால், இங்கிலாந்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்தி விளையாடுவது என்பது எளிதல்ல.
இங்கிலாந்தின் உள்ளூர் சாதகமும், அனுபவமும்
இங்கிலாந்து அணியில் பந்துவீச்சு யூனிட்டில் க்றிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தவிர்த்து மற்றவர்களை கணக்கிட்டால், அவர்களது பந்துவீச்சாளர்கள் அனைவரும் சேர்ந்து 26 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். அதில் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீரின் 16 போட்டிகள் அடங்கும். ஆனால், உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது அவர்களுக்கு சாதகமானதாக உள்ளது. பேட்டிங் யூனிட்டை பொறுத்தவரையில் ஜாக் கிராவ்லி 54 போட்டிகளிலும், பென் டக்கெட் 33 போட்டிகளிலும், போப் 56 போட்டிகளிலும், ஜோ ரூட் 153 போட்டிகளிலும், பென் ஸ்டோக்ஸ் 111 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். மற்ற பேட்ஸ்மேன்கள் கணிசமான போட்டிகளில் விளையாடி இருந்தாலும், உள்ளூர் மைதானங்களில் போதுமான அளவிற்கு அனுபவம் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இதனை இந்தியா திறம்பட சமாளிக்க வேண்டியது அவசியம்.
ஜோ ரூட் எனும் அரக்கன்:
இங்கிலாந்து அணியில் பேட்டிங் யூனிட்டின் முதுகெலும்பாக ஜோ ரூட் விளங்குகிறார். டெஸ்ட் போட்டிகளில் மிரட்டலான ஃபார்மில் உள்ள இவர், இந்திய அணிக்கு எதிராக வலுவான பேட்டிங் ரெக்கார்டை கொண்டுள்ளார். அதன்படி, இந்தியாவிற்கு எதிராக 30 போட்டிகளில் விளையாடி 10 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் உட்பட, 58.08 சராசரியில் 2 ஆயிரத்து 846 ரன்களை குவித்துள்ளார். இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் இவர் கொண்டுள்ளார். இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால், ஜோ ரூட்டை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். இல்லையெனில் தனிநபராக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டுள்ளார்.
கில் எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள்:
1. இளம்படையை இணைத்து நிர்வகிப்பது: அனுபவம் வாய்ந்த கம்பீர் பயிற்சியாளராக இருந்தாலும், களத்தில் வீரர்களை ஒருங்கிணைத்து அணியாக வழிநடத்துவது என்பது கில் கைவசமே உள்ளது. அணிக்குள் நம்பகமான சூழலை உருவாக்கி, ஒவ்வொருவரின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து தேவைக்கு ஏற்ப அவர்களை பயன்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
2.பேட்டிங்கில் கவனம்: அணியை வழிநடத்தும் அதேநேரத்தில் தனது பேட்டிங்கிலும் அணிக்கு தேவையான பங்களிப்பை வழங்க வேண்டும். மோசமான ஃபார்ம் காரணமாக ஆஸ்திரேலிவியாவிற்கு எதிரான தொடரில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கில், இங்கிலாந்து தொடரிலும் வெறும் 14.66 என்ற சராசரியையே கொண்டுள்ளார். இதிலிருந்து மீண்டு வந்து தனிப்பட்ட பேட்ஸ்மேன் ஆகவும் அணிக்கு பங்களிப்பு தந்து, வீரர்களுக்கு முன்னுதராணமாக இருக்க வேண்டும்.
3. கோலி, ரோகித்தின் வெற்றிடம்: இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச்-வின்னர்களாக இருந்த கோலி மற்றும் ரோகித்தின் ஓய்வால் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அனுபவம், அணியை முன்னெடுத்துச் செல்வது, இக்கட்டான நேரத்தில் அணிக்கு பங்களிப்பது போன்றவற்றில் முக்கிய பங்காற்றி வந்தனர். அவர்களுக்கான மாற்று வீரர்களை கண்டுபிடிப்பதோடு, கோலி மற்றும் ரோகித்தை கடந்து அணிக்கான அடையாளத்தையும் கில் உருவாக்க வேண்டியுள்ளது.
4. அணியை மேம்படுத்துவது: டெஸ்ட் தரவரிசைப் போட்டியில் இந்தியா மூன்றவாது இடத்தில் உள்ளது. அதேநேரம், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் திறம்பட செயல்பட்டு வருவதால், போட்டி தீவிரமாகி வருகிறது. எனவே, இந்திய அணி திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்ற வேண்டும் என்ற கனவை நனவாக்க வேண்டிய கட்டாயத்திலும் கில் இருக்கிறார்.




















