(Source: Poll of Polls)
93 வயதில் தீராக் காதல்: மனைவிக்கு தாலி வாங்க வந்த முதியவர்- 20 ரூபாய்க்குக் கொடுத்த நகைக்கடைக்காரர்!
வயதான தம்பதியின் அன்பையும் அப்பாவித்தனத்தையும் கண்டு அந்த நகைக்கடை உரிமையாளரின் மனம் பூரிப்பு அடைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 93 வயதான முதியவர் ஒருவர் பாக்கெட்டில் 1000 ரூபாய் வைத்துக்கொண்டு தனது மனைவிக்கு தாலி வாங்க மனைவியை அழைத்துக்கொண்டு நகைக்கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். வயதான தம்பதியின் அன்பையும் அப்பாவித் தனத்தையும் ரசித்த நகைக்கடை உரிமையாளர், வெறும் 20 ரூபாய் பெற்றுக்கொண்டு தங்க மாங்கல்யத்தை பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சம்பாஜிநகர் பகுதியில் வசிப்பவர் 93 வயதான முதியவர் நிவ்ருண்டி ஷிண்டே. இவரது மனைவி சாந்தா பாய். வெள்ளை வேட்டி, தலையில் குல்லா என எளிய தோற்றத்துடன் தனது வயதான மனைவியை அழைத்துக்கொண்டு நகைக்கடைக்கு சென்றுள்ளார் ஷிண்டே.
மனைவியின் நீண்ட கால ஆசை
மனைவிக்கு மாங்கல்யம் பரிசளிக்க வேண்டும் என்ற தனது நீண்ட கால ஆசையை நிறைவேற்ற கைப்பையில் 1000 ரூபாய் எடுத்துக்கொண்டு முகம் நிறைய புன்னகையுடன் அந்த தம்பதி கடைக்குள் நுழைந்துள்ளனர். முதலில் அவர்களை பார்த்து உதவி கேட்க வந்த முதியவர்கள் என தப்புக்கணக்கு போட்டுள்ளனர் நகைக்கடை ஊழியர்கள்.
அப்போது இருவரும் தங்க நகைகளை ஒன்றன்பின் ஒன்றாக பார்த்துக் கொண்டிருக்க இதனை தூரத்தில் இருந்து கவனித்த நகைக்கடையின் உரிமையாளர் கடை ஊழியரை அழைத்து என்னவென்று விசாரிக்க சொல்லியுள்ளார். அப்போது அந்த தம்பதியினர் ஜால்னா மாவட்டத்தில் உள்ள அம்போரா ஜ்ஹாஹிர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஏகாதசியை முன்னிட்டு இருவரும் பந்தர்பூருக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் 93 வயதான ஷிண்டே தனது மனைவிக்கு முதன்முதலில் தங்கம் வாங்கி கொடுக்கும் ஆசையுடன் இந்த கடைக்கு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மனம் நெகிழ்ந்த கடைக்காரர்
வயதான தம்பதியின் அன்பையும் அப்பாவித்தனத்தையும் கண்டு அந்த நகைக்கடை உரிமையாளரின் மனம் பூரிப்பு அடைந்துள்ளது. இதனையடுத்து அவரே அந்த தம்பதியின் அருகில் வந்து, அவர்கள் விரும்பிய தங்க செயினை அந்த அம்மாவின் கையிலும் மாங்கல்யத்தையும் எடுத்து முதியவர் கையிலும் கொடுத்து மனைவிக்கு பரிசளிக்க கூறினார். தனது பாக்கெட்டில் இருந்த 1120 ரூபாய் பணத்தை முதியவர் உரிமையாளரிடம் நீட்ட வெறும் 20 ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளார் அந்த நகைக்கடை உரிமையாளர். பின்னர் என்னிடம் நிறைய பணம் நகை உள்ளது. உங்களை போன்ற பெரியோரின் ஆசீர்வாதம்தான் தற்போது எனக்கு முக்கியம் என கூறி அவர்களிடம் ஆசி பெற்றார் நகைக்கடை உரிமையாளர். பின்னர் அந்த முதியவர்கள் கண்கலங்கி நகைக்கடை உரிமையாளருக்கு நன்றி தெரிவித்தனர்.
View this post on Instagram
அன்பில் மாற்றம் இல்லையே
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை அடுத்து
காலம் கடந்த பின்னும், கூந்தல் நரைத்த பின்னும் அன்பில் மாற்றம் இல்லையே என்ற பாடல் வரிகளை வாழ்ந்து காட்டியுள்ளனர் இந்த வயதான தம்பதி எனவும் மனிதநேயத்தில் மேலோங்கி நிற்கிறார் நகைக்கடை உரிமையாளர் எனவும் நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்து வருகின்றனர்.






















