Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
கல்வி ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாது என்ற தகவல் தவறானது என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

கல்வி ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாது என்ற தகவல் தவறானது என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
உடனடியாக பணியில் இருந்து கிளம்ப வேண்டுமா?
கல்வி ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாது. ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் உடனடியாக பணியில் இருந்து கிளம்ப வேண்டும் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதற்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கல்வியாண்டின் இடையே ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை மட்டுமே மறு நியமனம் வழங்கப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மறு நியமனம் எப்போது வரை?
இதுகுறித்து இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் அந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாள் (ஏப்ரல் 30ஆம் தேதி) வரை தொடர்ந்து பணியாற்ற மறு நியமனம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
அதில் திருத்தம் செய்து கல்வியாண்டு முடியும் மே மாதத்தின் இறுதி நாள் (மே 31) வரை மறுநியமனம் செய்வதற்கு அனுமதி அளித்து, ஆணை வழங்க தமிழக அரசிடம் கருத்துரு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாத நிலை உள்ளதாக தமிழக அரசால் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கையை ஏற்க இயலாத நிலை
அதனால் இந்த மறு நியமனக் கோரிக்கையை ஏற்க இயலாத நிலை உள்ளது. இதை பின்பற்றி செயல்பட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.






















