EB Bill: மின்கட்டணம் செலுத்தாத பாட்டி..! வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மின் ஊழியர்கள்..!
மத்தியப்பிரதேசத்தில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டி ஒருவரின் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்ற சம்பவம் கடும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டி ஒருவரின் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்ற சம்பவம் கடும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
பொருட்களை தூக்கிச்சென்ற மின்ஊழியர்கள்:
பொதுவாக நம்முடைய வீடுகளில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் முடிந்தால் மின்வாரிய ஊழியர்கள் வீட்டிற்கு வந்து இணைப்பை தூண்டித்து விட்டு செல்வது வழக்கம். ஆனால் மத்தியப்பிரதேசத்தில் உள்ள மின்வாரிய ஊழியர்களோ வீட்டில் உள்ள பொருட்களை தூக்கிச் சென்றுள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி ஒருவர் ரூபாய் 19 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் பொறுத்துப் பார்த்த மின்வாரிய ஊழியர்கள் நேராக மூதாட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கிருந்த கட்டில் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
மூதாட்டி பரிதாபம்:
இது ஒருபுறமிருக்க மறுபுறம் வீட்டில் நடப்பது எதுவும் தெரியாமல் மூதாட்டி குளித்துக் கொண்டிருந்துள்ளார். பின் சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்த அவர் மின்வாரிய ஊழியர்கள் பொருட்களை தூக்கிச் செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தடுக்க மூதாட்டி நினைத்தாலும் அவரின் பேச்சை எவரும் கேட்பதாயில்லை. ஊழியர்கள் பின்னால் அரை நிர்வாணமாக அங்கு இங்கும் பொருட்களை மீட்க மூதாட்டி ஓடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது.
4 பேர் சஸ்பெண்ட்:
பலரும் மின்வாரியத்திற்கு எதிராக தங்கள் கண்டனங்களை பகிர்ந்தனர். இது மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக மாநில எரிசக்தி அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் நடவடிக்கை எடுக்க உத்தவிட்டார். அதனடிப்படையில் இந்த விவகாரத்தில் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணைக்காக மின்சார வாரியத்தின் மூத்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மூதாட்டி தரப்பில் கூறப்படும்போது, மகன் மற்றும் மருமகள் தன்னை விட்டுச் சென்றுவிட்டதாக அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படுவதாகவும், அதனால் தான் மின் கட்டணம் செலுத்தவில்லை எனவும் கூறியதாக சொல்லப்படுகிறது. மின் இணைப்பானது மருமகள் பெயரில் இருப்பதால் அவரிடம் அபராதம் வசூலிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Pathu Thala Movie Review: நல்லவனுக்கு ரட்சகன்; கெட்டவனுக்கு ராவணன் - ‘பத்து தல’யில் பக்காவாக பொருந்தினாரா சிம்பு? முழு விமர்சனம்!