2000 கோடி சொத்து வைத்திருக்கும் நடிகர்.. பேருந்தில் செல்லும் மகன்.. யார் அந்த பிரபலம் தெரியுமா?
ரூ.2,000 கோடி சொத்து வைத்திருக்கும் நடிகரின் மகனின் செயலை பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

சினிமாத்துறையில் இருப்பவர்கள் பலரும் வசதியான வாழ்க்கையே வாழ விரும்புவார்கள். சொகுசு கார், பங்களா, ஆடம்பரமான வாழ்வை வாழ ஆசைப்படுவது உண்டு. ஆனால், பிரபல நடிகரின் மகன் ஒருவர் இதையெல்லாம் வேண்டாம் என்கிறாராம். இதை அந்த நடிகரே கூறியிருப்பது தான் ஆச்சர்யம். இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் யாருப்பா அந்த பிரபலம் என இணையத்தில் தேட தொடங்கிவிட்டனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். சமீபத்தில் இவரது நடிப்பில் சிதாரே ஜமீன் பர் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தின் புரோமாஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருந்தார். முதலில் இப்படத்தில் நான் நடிக்கும் எண்ணம் இல்லை. தயாரிப்பாளராக இருக்கவே விரும்பினேன். கதை கேட்டதும் பிடித்து போகவே நடிக்க வந்தேன் என தெரிவித்தார். அதன் பிறகு, தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாகவும், பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டேன் எனவும் அமீர்கான் கூறியிருந்தார். இதுதொடர்பான செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், நடிகர் அமீர்கான் தனது மகன் ஜுனைத் கான் பற்றி கூறியது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் ரீமேக்கில் ஜூனைத் கான் இந்தியில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அவர் அறிமுகம் ஆனார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாவிட்டாலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஜூனைத் கான் குறித்து பேசிய அமீர் கான், என் மகன் இன்னும் கார் கூட வாங்கவில்லை. கார் வைத்துக்கொள் என்று சொல்லி எனக்கு அலுத்து விட்டது. அவன் இப்போதும் ஸ்லீப்பர் பஸ்ஸில் தான் பயணிக்கிறான். அதுதான் அவனுக்கு பிடித்திருக்கிறதாம்.
வெளியூர் சூட்டிங்கிற்கு விமானத்திற்கு போக சொன்னால் பேருந்தில் டிக்கெட் புக் செய்து பயணிக்கிறான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், அவன் என்னை தாண்டி மிகவும் எதார்த்தத்தை விரும்புகிறான் என அமீர்கான் பெருமையுடன் பேசியிருந்தார். மேலும், நடிகர் அமீர் கானுக்கு 2000 கோடி சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகரின் மகனா இது என பலரும் ஆச்சர்யப்படுகின்றனர்.





















