"என் மகனுக்கு பதவி வேணும்” துரைமுருகன் கண்டிஷன்! தீவிர அரசியலுக்கு FULLSTOP?
என்னுடைய மகன் கதிர் ஆனந்துக்கு பதவி கொடுத்தால், பொதுச்செயலாளர் பதவியை நானே ராஜினாமா செய்து கொள்கிறேன் என துரைமுருகன் கண்டிஷன் போட்டுள்ளதாக சொல்கின்றனர். அதே போல் வரும் தேர்தலில் சீட் வேண்டாம் என சொல்லி விட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாமா என்ற யோசனையிலும் துரைமுருகன் இருக்கிறாராம்.
திமுக தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் பதவி விரைவில் கைமாறவிருக்கிறது. துரைமுருகனிடம் இருக்கும் பொதுச்செயலாளர் பதவியை டி.ஆர்.பாலுவிடம் ஒப்படைப்பதற்கான முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் திமுகவின் மூத்த தலைவராகவும், அனுபவம் வாய்ந்தவராகவும் துரைமுருகன் இருப்பதால் எந்த ஒரு அதிருப்தியும் இல்லாமல் அவர் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறாராம். துரைமுருகன் மீது அதிருப்தி எதுவும் கிடையாது, வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவதால் தான் பதவியை கைமாற்ற ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
ஆனால் பொதுச்செயலாளர் பதவியை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்த துரைமுருகன், தற்போது ஒரு கண்டிஷனுடன் இறங்கி வந்துள்ளதாக சொல்கின்றனர். அதாவது வேலூர் எம்.பியும் தனது மகனுமான கதிர் ஆனந்துக்கு கட்சியிலோ, ஆட்சியிலோ முக்கிய பொறுப்பு ஒன்றை கொடுத்தால் பொதுச்செயலாளர் பதவியை நானே ராஜினாமா செய்து கொள்கிறேன் என பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர். இனி தனது மகனின் அரசியல் எதிர்காலம் முக்கியம் என்பதால் தனது மகனை கட்சி பார்த்து கொண்டால் எந்த அதிருப்தியும் இல்லாமல் தலைமை கழக மாற்றத்தை நடத்திக் கொள்ளலாம் என்ற முடிவில் துரைமுருகன் இருக்கிறாராம்.
அதே போல் வரும் 2026 தேர்தலிலும் சீட் வேண்டாம் என்று துரைமுருகன் ஸ்டாலினும் சொல்லப் போவதாக பேச்சு இருக்கிறது. உடல்நலப் பிரச்னை காரணமாக அடிக்கடி மருத்துவமனை செல்வதால் துரைமுருகனுக்கு ஓய்வு தேவைப்படுவதாக சொல்கின்றனர். அதனால் மகனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வரும் தேர்தலில் இருந்து தீவிர அரசியலுக்கு முழுக்கு போட்டு விடலாம் என்ற யோசனையில் துரைமுருகன் இருப்பதாக நெருங்கிய வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் தனது மகனின் அரசியல் எதிர்காலத்துக்கு கட்சியில் இருந்து என்ன தேவையோ அதை வாங்கிவிட்டு தான் துரைமுருகன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என்பதில் கறாராக இருக்கிறாராம்.





















