OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
OP Sindoor IAF: இந்திய அரசியல் தலைவரின் நிலைப்பாடு காரணமாகவே, ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானால் நமது விமானங்கள் சில சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

OP Sindoor IAF: இந்திய அரசியல் தலைவரின் நிலைப்பாடு என ராணுவ அதிகாரி குறிப்பிட்டது யாரை? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
”விமானங்களை இழந்த இந்தியா”
இந்திய விமானப்படை கடந்த மே மாதம் 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது, தாக்குதல் நடத்தியபோது சில போர் விமானங்களை இழந்ததாக இந்தோனேஷியாவிற்கான இந்திய பாதுகாப்பு இணைப்பாளர் கேப்டன் சிவ்குமார் தெரிவித்துள்ளார். மேலும், “ஆப்ரேஷன் சிந்தூரின் போது எல்லையை தாண்டி, பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் அல்லது வான் பாதுகாப்பு நிலையங்கள் மீதோ எந்த தாக்குதலையும் நடத்தக்கூடாது என, இந்தியாவின் அரசியல் தலைமை வலியுறுத்தியதே இதற்கு காரணம்” என்றும் சிவக்குமார் பேசியிருக்கிறார். ஆப்ரேஷன் சிந்தூரின் போது இந்திய விமானப்படை சில விமானங்களை இழந்ததாக பாதுகாப்பு படை தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சிங்கப்பூரில் கடந்த மே 31ம் தேதியன்று பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது, கடற்படையில் கலோனl பதவிக்கு இணையான பொறுப்பில் உள்ள சிவ்குமாரின் இந்த கருத்தானது முக்கியத்துவம்பெற்றுள்ளது.
எத்தனை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன?
ஆப்ரேஷன் சிந்தூரின் போது நமது விமானப்படை விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன, என்ற தகவலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது வரை வெளியிடவில்லை. அதேநேரம், ஃபிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் விமானங்களில் 3 உட்பட, 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், அது முற்றிலும் தவறு என இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
சிவ்குமார் சொன்னது என்ன?
கடந்த 10ம் தேதியன்று 'பாகிஸ்தான்-இந்தியா வான் போரின் பகுப்பாய்வு மற்றும் வான் சக்தியின் பார்வையில் இந்தோனேசியாவின் முன்னேற்பாடு உத்திகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது, இந்தியா ஆப்ரேஷன் சிந்தூரின் போது பல விமானங்களை இழந்ததாக இந்தோனேசியாவைச் சேர்ந்த பங்கேற்பாளர் பேசினார். அதனை மறுத்து பேசிய சிவ்குமார், “பல போர் விமானங்களை இழந்தோம் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேநேரம், சில விமானங்களை இழந்ததை ஏற்றுக்கொள்கிறேன். அதுவும் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது அரசியல் தலைமை வழிகாட்டியதால் மட்டுமே ஆகும். இழப்புகளுக்குப் பிறகு திட்டங்களை மாற்றி, ரேடார் போன்ற ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதனால், எதிரி நாட்டின் வான் பாதுகாப்பு அம்சங்களை வீழ்த்தினோம். அதன் காரணமாகவே பிரமோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை கொண்டு நடத்திய தாக்குதல் எளிதாக இருந்தது” என சிவ்குமார் விளக்கமளித்துள்ளார்.
அட்டாக்கில் இறங்கிய காங்கிரஸ்?
கேப்டன் சிவ்குமாரின் பேச்சு வெளிச்சத்திற்கு வந்ததும், ஆப்ரேஷன் சிந்தூரை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து காங்கிரஸ் மீண்டும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளது. அரசியல் தலைவர் என அவர் குறிப்பிட்டது பிரதமர் மோடியை தான் என்றும், முறையான திட்டமிடல் இன்றி நடத்திய தாக்குதல் காரணமாகவே நாம் இழப்பை சந்தித்ததாகவும் மோடி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக, சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்ட காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தினாலும், மத்திய அரசு அதற்கு முன்வரவில்லை. இந்நிலையில் தான், அரசியல் தலைவரின் முடிவாலேயே நாம் சில போர் விமானங்களை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு தரப்பில் வந்த மறுப்பு:
விமர்சனங்கள் அதிகளவில் குவிந்த நிலையில் இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம், ”கேப்டன் குமாரின் பேச்சு தொடர்பான ஊடக அறிக்கைகள் அவரது விளக்கத்தின் நோக்கத்தை தவறாக சித்தரிப்பதாக விளக்கமளித்துள்ளது. மேலும், ”இந்திய ஆயுதப்படைகள் நமது அண்டை நாடுகளில் உள்ள வேறு சில நாடுகளைப் போலல்லாமல், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமையின் கீழ் செயல்படுகின்றன என்பதை கேப்டனின் பேச்சு வெளிப்படுத்தியது. பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைப்பதே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்” என்றும் இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் விளக்கமளித்துள்ளது.





















