சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களும், காவல்துறையில் நடக்கும் அவலங்களும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வைக்க கூட்டணியை வலுப்படுத்துல், 5 ஆண்டுகள் ஆட்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு:
ஆனால், தமிழ்நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு நிகழ்வுகள் திமுக அரசிற்கு அடி மேல் அடியை வாங்கித் தந்து கொண்டிருக்கிறது. கடந்த கால அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை மிக கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு, தற்போது அவரது ஆட்சியில் நடக்கும் சட்டம் ஒழுங்கு அசம்பாவிதங்கள் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் என அதன் பட்டியல் நீ்ண்டு கொண்டே போகிறது. திருவண்ணாமலையில் ஒரே நாளில் நடந்த வங்கி ஏடிஎம் கொள்ளை பொதுமக்களின் உடைமைகள் பாதுகாப்பை கேள்வி எழுப்பிய நிலையில், தலைநகர் சென்னையில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.
கொலை, பாலியல் வன்கொடுமைகள்:
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலைமையா? என்று அனைவரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகத்தின் உள்ளே புகுந்து திமுக ஆதரவாளர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது பெண்களின் பாதுகாப்பில் திமுக அரசு கொண்டுள்ள அக்கறை மீது கேள்வியை எழுப்பியது.
லாக்கப் மரணம்:
இதையடுத்து, திருவள்ளூரில் சிறுவன் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி மட்டுமின்றி காவல்துறை உயர் அதிகாரியான ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாக வெளியானது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியது. இப்போது, சிவகங்கையில் இளைஞர் ஒருவர் காவல்துறை விசாரணைக்காக சென்றபோது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் தொடரும் லாக்கப் மரணங்களின் அவலத்தை காட்டியுள்ளளது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மட்டும் 25 லாக்கப் மரணங்கள் அரங்கேறியுள்ளதாக பா.ஜ.க. நிர்வாகி எஸ்.ஜி. சூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு திமுக ஆட்சியில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு அசம்பாவிதங்கள் பொதுமக்களுக்கு திமுக ஆட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதன் காரணமாக கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்காக பல வியூகங்களை வகுத்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு இந்த சட்டம் ஒழுங்கு சிக்கல் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
தேர்தலில் எதிரொலிக்குமா?
தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் பெரும் வேதனையையும், அதிருப்தியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதால் அது தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த விவகாரங்களை மக்கள் மத்தியில் பெரியளவில் கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.





















