கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
பாரா ஸ்விம்மிங்கில் 100க்கும் மேற்பட்ட பதங்களை வென்ற இளம் வீரரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய பாரா நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை வாரி குவித்து வருகிறார் நிரஞ்சன் முகுந்தன். ஏழு வயது வரை எழுந்து நிற்க கூட முடியாத நிலையில் இருந்துள்ளார். இதுவரை 19 அறுவசை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, ஓயாமல் வெளிநாடுகளுக்கு பறந்துக் கொண்டிருக்கும் நிரஞ்சன் முகுந்தனை முக்கிய சினிமா பிரபலம் நேரில் அழைத்து பாராட்டியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
யார் இந்த நிரஞ்சன் முகுந்தன்
பெங்களூருவை சேர்ந்த நிரஞ்சன் முகுந்தன் தனது சிறு வயதில் முதுகு தண்டு வடம் வளர்ச்சி அடையாமல் ஸ்பைன் பைஃபிடா என்ற குறைபாட்டுடன் பிறந்திருக்கிறார். பொதுவாக இந்த பிரச்சினை இருப்பவர்களுக்கு மூளை அல்லது உடலில் குறைபாடு ஏற்படும். அவருக்கு இடுப்புக்குகீழே இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அவரால் நடக்கவும், நகரவும் கடினமாக இருந்திருக்கிறது. 7 வயது வரை பெற்றோரின் உதவியால் வளர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதிலிருந்து மீண்டு 2003ல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 2004ல் மாநில அளவில் நீச்சல் போட்டிக்கு தயாராகியுள்ளார்.
விடா முயற்சி விஷ்வரூப வெற்றி
ஆரம்பகாலகட்டத்தில் ஒரு நேரம் தாக்கு பிடிப்பதே கடினமாக இருந்ததாகவும், தற்போது 6 மணி நேரம் பயிற்சி எடுப்பதாக அவரே தெரிவித்துள்ளார். மேலும், ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து விளையாடி பதக்கங்களை வென்றுள்ளார். 2015-ம் ஆண்டில் ஜூனியர் உலக சாம்பியன் படத்தை வென்றார் நிரஞ்சன் முகுந்தன். அந்த போட்டியில் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற முதல் இளைஞர் இவர்தான். அதேபாேன்று 21 வயதில் கர்நாடக அரசின் உயரிய விருதான ராஜ்யோத்சவா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்
பாரா ஸ்விம்மிங்கில் நூறு பதக்கங்களுக்கு மேல் வென்றிருக்கும் நிரஞ்சன் முகுந்தன், நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பது தான் எனது வாழ்நாள் லட்சியம் என்று அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இவர் பேசி வெளியிட்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ ரஜினிகாந்தின் கண்ணில் பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் நிரஞ்சன் முகுந்தனுக்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் முகுந்தனை சந்தித்து பேசிய புகைப்படம் வெளியாகியுள்ளது. மைசூரில் நடந்த படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் முகுந்தனை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.
கடவுளின் குழந்தை
ரஜினிகாந்தை சந்தித்து பேசியது குறித்து பேசிய நிரஞ்சன், "ரஜினி சார் நான் சென்னையே சேர்ந்தவர் என நினைத்து நீங்கள் மைசூர் வர முடியுமா என கேட்டிருந்தார். உடனடியாக சார் என் ஊர் பெங்களுரூ என்றதும் அப்ப உடனே வாங்க சந்திக்கலாம் என தெரிவித்தார். ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நேரில் சந்தித்தேன். அவரை சந்தித்த தருணத்தை என் வாழ்வில் மறக்கவே முடியாது. அவரை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. எப்படியும் அவருடன் அரைமணி நேரம் பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன். என்னை அவர் கடவுளின் குழந்தை என அழைத்தார். நான் அவருக்கு நான் 100வது பதக்கம் வென்றபோது தலையில் அணிந்த தொப்பியை அவருக்கு பரிசாக அளித்தேன்" என நிரஞ்சன் முகுந்தன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.





















