Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
Chess Champion Gukesh: உலக செஸ் சாம்பியனான தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், குரேஷியாவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூரில் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

Chess Champion Gukesh: குகேஷ் உடனான தோல்விக்கு பிறகு பேசிய முன்னாள் செஸ் சாம்பியனான கால்சென், செஸ் விளையாட்டே பிடிக்கவில்லை என பேசியுள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்:
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியில், ரேபிட் பிர்வில் உலக செஸ் சாம்பியனான தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் அவரது புகழ் மேலும் பரவ தொடங்கியுள்ளது. 19 வயதான குகேஷ் அமைதியாக, அபாரமான காய் நகர்த்தல்கள் மூலம் எதிராளிகளை வீழ்த்தி 14 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளார்.
World Champion Gukesh @DGukesh 🇮🇳 wins Grand Chess Tour Croatia rapid 💥💥💥https://t.co/ww3WCIsgfi
— Chessdom (@chessdom) July 4, 2025
வெற்றிப் பயணம்:
இந்த போட்டியின் முதல் சுற்றில் போலந்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான ஜான்-கிர்சிஸ்டோஃப் டுடாவிடம் குகேஷ் தோல்வியுற்றார். அதன் பிறகு சுதாரித்துக் கொண்டதுடன், மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்கடுத்தபடியாக விளையாடிய 5 சுற்றுகளிலும் தொடர்ந்து வெற்றியை வசமாக்கினார். குறிப்பாக நான்காவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான மாக்னெஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறினார். இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை வீழ்த்தி பட்டத்தை தனதாக்கினார். மொத்தம் அவர் விளையாடிய 9 சுற்றுகளில் ஆறு வெற்றிகள், இரண்டு டிராக்கள் மற்றும் ஒரே ஒரு தோல்வியை குகேஷ் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவிலும், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களிலும், நடப்பாண்டின் இரண்டு முக்கிய செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. அதிலும், குகேஷ் ஆதிக்கம் செலுத்தி, இந்திய செஸ் வரலாற்றின் முக்கிய ஆண்டாக 2025-ஐ மாற்றுவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒட்டுமொத்த சாம்பியன் யார்?
இதனிடையே, ரேபிட் பிரிவில் குகேஷை வீழ்த்திய ஒரே வீரரான ஜான் இரண்டாவது இடத்தை பிடிக்க, கால்சென் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மறொரு இந்திய வீரரான பிரக்ஞானந்தா 9 சுற்றுகளில் ஒரே ஒரு வெற்றி மற்றும் 7 டிராக்களை பதிவு செய்தார். தொடர்ந்து, இந்த போட்டியின் பிளிட்ஸ் பிரிவு ஆட்டங்கள் இன்று தொடங்கி, நாளை வரை நடைபெறுகிறது. அதன் முடிவில் இரண்டு பிரிவுகளில் பெற்ற புள்ளிகளை சேர்த்து, ஒட்டுமொத்தமாக கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின் சாம்பியன் யார் என்பது இறுதி செய்யப்படும்.
புலம்பும் மேக்னஸ் கார்ல்சன்
முன்னதாக, குகேஷ் உடனான தோல்வி குறித்து பேசிய கார்ல்சன், தனக்கு தற்போது செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அதன்படி, “ நான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். குகேஷ் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கே எல்லா புகழும் சேரும். இந்த முறை நான் கடுமையாக தண்டிக்கப்பட்டேன். உண்மையைச் சொன்னால், நான் இப்போது செஸ் விளையாடுவதை ரசிக்கவில்லை. ஒரு சரியான பாதையில் நான் இல்லை. நான் விளையாடும்போது, நான் தொடர்ந்து தயங்குகிறேன். இப்போது அது மிகவும் மோசமாக உள்ளது” என கார்ல்சன் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.




















