அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
அஜித்குமார் மரண வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வழக்கிலும் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதிகளவு வர்த்தகம் கொண்ட திரையுலகமாக பாலிவுட் திரையுலகம் உள்ளது. பாலிவுட் திரையுலகில் அதிகளவு போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில், தற்போது தமிழ் திரையுலகிலும் பிரபலங்களுக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
போதைப்பொருள் வழக்கு:
இந்த சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோகைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்திய குற்றத்திற்காக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 3 பாக்கெட்டுகள் கொகைன் கைப்பற்றப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. அவர் கைது செய்யப்பட்ட அதே வழக்கில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அதிமுக பிரசாத் கைது செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருள் விநியோகித்த குற்றத்திற்காக கெவின் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த சூழலிலே, போலீசார் நடத்திய தாக்குதலினால் சிவகங்கையில் அஜித்குமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.
தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணம்:
இந்த கொலை வழக்கில் போலீசார் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அஜித்குமார் மரண வழக்கு தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சிக்கிய போதைப்பொருள் வழக்கு பலராலும் மறக்கப்பட்டு வருவதாக பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், நேற்று போலீசார் நடத்திய விசாரணையில் போதைப்பொருளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கெவின் கிருஷ்ணா மட்டுமின்றி ஏராளமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு போதைப்பொருளை வழங்கியதாக வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிடிபடுவார்களா பிரபலங்கள்?
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சமீபகாலமாக பிரபலங்கள் பார்ட்டி செல்வது அதிகரித்துள்ளது. உச்சத்தில் உள்ள பிரபலங்கள் முதல் வளரும் நடிகர்கள் வரை பலரும் பார்ட்டிக்குச் செல்வது வழக்கமாகி வருகிறது. பிரபலங்களுக்கான போதைப்பொருள் விநியோகம் என்பதே இந்த பார்ட்டிகளில்தான் நடப்பதாக கூறப்படுகிறது.
இதனால், போலீசார் பார்ட்டிகளில் பங்கேற்கும் நடிகர்கள், நடிகைகளின் பட்டியலை தயார் செய்து வருகின்றனர். மேலும், கெவின், பிரசாத் ஆகியோர் வாக்குமூலத்தின் அடிப்படையில் எந்தெந்த பிரபலங்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தினார்கள்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் மீது அஜித்குமார் மரண வழக்கில் கடும் விமர்சனங்கள் குவிந்துள்ள நிலையில், இந்த வழக்கில் முறையான விசாரணையை மேற்கொண்டு இதன் பின்னணியில் உள்ள பிரபலங்கள் பலரது உண்மை முகத்தையும் வெளிக்காட்டுவார்கள் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மேலும், போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வரவும் அரசும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.





















