அந்த மனசுதான் சார் கடவுள்! படத்துக்காக கட்டப்பட்ட வீட்டை பகிர்ந்தளிக்கும் சூர்யா!
சூர்யா 41 படப்பிடிப்பு முடிந்ததும் செட் போடப்பட்ட வீடுகளை வீடு இல்லாமல் கஷ்டப்படும் மூன்று குடும்பங்களுக்கு சூர்யா தர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யாவிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் வித்தையை சூர்யா கற்றுக்கொண்டது, 2001ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தில். அவருக்கு கற்றுக்கொடுத்தது இயக்குநர் பாலா. அதன் பிறகு பாலா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான 'பிதாமகன்' படத்தில் சூர்யா தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தார். இதன் காரணமாக பாலா மீது சூர்யாவுக்கு எப்போதும் தனி பிரியமும், மரியாதையும் எப்போதும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் 'அவன் இவன்' திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்தது.
இந்த வெற்றி கூட்டணி சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது இணைந்திருக்கிறது. கடந்த மார்ச் 28 அன்று, நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா ஆகியோர் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `சூர்யா 41’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், சூர்யா நடிகராக நடிக்கும் 41வது திரைப்படமாகவும், தயாரிப்பாளராக 15வது திரைப்படமாகவும் அமைய இருக்கிறது. ஜோதிகா, சூர்யா தம்பதியின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பை மேற்கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டின் முனையில் இருக்கும் அழகான கடற்கரை நகரமான கன்னியாகுமரியில் நடைபெற்று வருவதாகவும்,சூர்யா கடலோர நகரத்தில் படகு ஓட்டும் நபராகவும், மேலும், அவர் நடிக்கும் கதாபாத்திரம் செவித்திறன், பேச்சுத் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி வேடம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்தியப் பெருங்கடலின் சீற்றம் தொடர்பான அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சூர்யாவும் பாலாவும் மற்ற குழு உறுப்பினர்களுடன் ஐந்து படகுகளில் நடுக்கடலில் இதுவரை கண்டிராத ஆக்ஷன் காட்சிகளை படமாக்குகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில்,'சூர்யா 41' படத்தின் அடுத்த படப்பிடிப்புக்கான செட் வேலைகள் தற்போது தொடங்கியுள்ளன. படத்திற்கு மூன்று வீடுகள் தேவை என்பதால் சூர்யா தனது கலை இயக்குநரிடம் செட் போடாமல் உண்மையான வீடுகளை கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளார். படப்பிடிப்பு முடிந்தது அந்த வீடுகளை வீடு இல்லாமல் கஷ்டப்படும் மூன்று குடும்பங்களுக்கு சூர்யா தர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட சூர்யா ரசிகர்கள், சமுக வலைதளங்களில் நடிகர் சூர்யாவை கொண்டாடி வருகின்றனர்.
'சூர்யா 41' படத்திற்கு ஜி.வி இசையமைக்க, கிருத்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜ்ஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் இறுதிக்குள் முழுப் படமும் ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு 2022-ம் ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்