Saina Nehwal Divorce: நீங்களுமா? கணவரை பிரிந்தார் சாய்னா நேவால்.. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவரும் பேட்மிண்டன் வீரருமான காஷ்யப்பை பிரிவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால். சர்வதேச அரங்கில் பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவை மிளிரச் செய்தவர். இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவலாக இவர் தனது கணவர் பருபள்ளி காஷ்யப்பை பிரிவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை பிரிந்தார் சாய்னா நேவால்:
நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நிறைய சிந்தனைக்குப் பிறகு காஷ்யப்பும் நானும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நாங்கள் அமைதி, வளர்ச்சி மற்றும் மீண்டு வருவதையே ஒருவருக்கு ஒருவர் தேர்வு செய்கிறோம்.
இந்த நினைவுகளுககு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால், கடந்து செல்வதுதான் சிறப்பானதாக இருக்கும். எங்கள் தனியுரிமைக்கு மதிப்பு அளித்ததற்கு மிக்க நன்றி
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி:
சாய்னா நேவாலின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாய்னா நேவாலின் கணவர் காஷ்யப்பும் பிரபல பேட்மிண்டன் வீரர். தற்போது அவர் கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சியாளராக உள்ளார். அர்ஜுனா விருது பெற்ற காஷ்யப்பிற்கும் - சாய்னா நேவாலும் சிறுவயது முதலே நண்பர்கள் ஆவார்கள்.

கடந்த 2018ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீப்தி காஷி என்பவரது ஸ்டோரியை பகிர்ந்த சில மணி நேரங்களில் சாய்னா நேவால் இந்த முடிவை அறிவித்தார்.
பேட்மிண்டனில் படைத்த சாதனையை பாராட்டும் விதமாக கேல்ரத்னா விருது, அர்ஜுனா விருது, பத்மபூஷண் விருது, பத்மஸ்ரீ விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார். சாய்னா நேவாலின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? என்று இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக காஷ்யப்பும் எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை. சமீபகாலமாக இந்தியாவில் பிரபலங்களின் விவகாரத்து அதிகரித்து வருகிறது. திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அந்தந்த துறையில் பிரபலமாக இருப்பவர்களின் விவாகரத்து அவர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.





















