Saroja Devi Death: சூப்பர் ஸ்டார்களை விட அதிக சம்பளம்.. பெண் சூப்பர் ஸ்டார் சரோஜா தேவி!
மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கு நடிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) மரணம் தமிழ் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது மரணத்திற்கு நடிகைகள், நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார்களை விட அதிக சம்பளம்
1955ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் மகாகவி காளிதாஸ் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் சரோஜா தேவி. அவரது முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் தேசிய விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் மைசூர் ராஜியத்தில் 1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி சரோஜா தேவி பிறந்தார். அவரது தந்தை பைரப்பா. தாய் ருத்ரம்மா. தந்தை காவல் அதிகாரி.அவரது இயற்பெயர் ராதாதேவி. சினிமாவிற்காக சரோஜா தேவி என மாற்றிக்கொண்டார். தமிழ் திரையுலகில் 60 முதல் 70 காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜா தேவி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடிகையாக நடித்து புகழ் பெற்றுள்ளார். அன்றைய சூப்பர் ஸ்டார்களை விட அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சரோஜா தேவி.
பெண் சூப்பர் ஸ்டார்
50 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் சரோஜா தேவி நடித்துள்ளார். தமிழில் திருமணம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் எம்ஜிஆருடன் 26 படங்களிலும், சிவாஜியுடன் 22 படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கடைசியாக இவர் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். கதை சொல்லும் கண்கள், உணர்ச்சி பொங்கும் முகம் என ரசிகர்கள் சரோஜா தேவியை தலையில் வைத்து கொண்டாடினர். ஒரே நேரத்தில் 30 படங்களில் நடித்தவர் சரோஜாதேவி. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நடித்தார் என சொல்வார்கள். தமிழ் கன்னட திரை உலகில் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றும் பெருமை பெற்றவர். நடிகை சரோஜாதேவி இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
திரை பிரபலங்கள் இரங்கல்
நடிகை ராதிகா சரோஜா தேவி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார், அதில், என்னை எப்போது பாராட்டி கொண்டே இருப்பார். எம்.ஆர். ராதா அண்ணன் பொண்ணு தான். நீ ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரம் ரொம்ப பிடிக்கும் உன் படங்களை பார்ப்பேன். ராதா அண்ணன் பொண்ணு நல்லா நடிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு என்று சரோஜா தேவி அம்மா கூறுவார். அவரது மரண செய்தியறிந்து மனம் உடைந்து போனேன். உண்மையில் பெண் நடிகர்களில் அவர் சூப்பர் ஸ்டார் தான். அவர் மாதிரியெல்லாம் ஒவ்வொரு படத்திற்கு வித்தியாசம் காட்டி நடிக்க முடியாது. அவங்க ஆத்மா சாந்தியடைய வேண்டும் என ராதிகா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் இரங்கல்
சரோஜா தேவி அம்மாவை பார்த்து வியந்து போனேன். அவரிடம் ஆசிர்வாதம் பெற்றது பெருமையாக கருதுகிறேன். அவர் மாதிரி ஒரு நடிகையை இனி பார்க்க முடியாது. என்னை மனதார வாழ்த்தினார். சரோஜா தேவி அம்மாவை ரொம்ப மிஸ் பன்றோம் என தெரிவித்தார். அதேபோன்று நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.





















