TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
TNEA 2025: சிறப்புப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கி, நடைபெற்ற நிலையில் இன்று (ஜூலை 14) பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் லட்சக்கணக்கான பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர்கள் சேர, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், கலந்தாய்வு நடைபெறுகிறது.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
இதில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கி, நடைபெற்ற நிலையில் இன்று (ஜூலை 14) பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி உள்ளது.
200 முதல் 179 வரை கட் ஆஃப் மதிப்பெண்களைக் கொண்ட மாணவர்கள், குறிப்பாக தரவரிசையில் 1 முதல் 39,145 இடங்களைப் பிடித்தவர்கள், இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள் ஆவர்.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
இதே கலந்தாய்வுடன் 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வும் தொடங்கி நடைபெற உள்ளது. இதிலும் 200 முதல் 179 வரை கட் ஆஃப் மதிப்பெண்களைக் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள், குறிப்பாக தரவரிசையில் 1 முதல் 2,662 இடங்களைப் பிடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
தொழிற்கல்வி மாணவர்களும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள் ஆவர்.

முக்கியத் தேதிகள் என்ன?
மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங்கை இன்று (ஜூலை 14) காலை 10 மணி முதல் ஜூலை 16ஆம் தேதி மாலை 5 மணி வரை மேற்கொள்ளலாம்.
இவர்களுக்குக் கல்லூரி தற்காலிக இட ஒதுக்கீடு ஜூலை 17ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அப்போதில் இருந்து ஜூலை 18 மாலை 5 மணிக்கு உள்ளாக, கல்லூரியை மாணவர் இறுதி செய்ய வேண்டும். அதேபோல, கல்லூரியில் ஜூலை 19 காலை 10 மணி முதல் ஜூலை 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிய ஆவணங்களுடன் சேர வேண்டும் என்று பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களைப் பெற
மாணாக்கர்களுக்கு எதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேரக்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன. மாணவர்க அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.
முழு விவரங்களுக்கு: https://www.tneaonline.org/






















