ஒருத்தருக்காக 10 கிமீ பயணம் - ஒரு தபால்காரரின் நெகிழ்ச்சி கதை!
பாபநாசம் அருகே மலைப்பகுதியில் 9 கி.மீ. தூரம் நடந்து சென்று மூதாட்டிக்கு தபால் ஊழியர் உதவித்தொகை வழங்குவது அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சின்ன மயிலாறில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது காரையாறு அணைக்கு மேலே இஞ்சுக்குழி பகுதியில் வசிக்கும் 104 வயதான மூதாட்டி குட்டியம்மாள் முதியோர் உதவித்தொகை கேட்டு மனு வழங்கினார். அவரது கோரிக்கையை ஏற்று முதியோர் உதவித்தொகை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து குட்டியம்மாளுக்கு கடந்த ஐந்து மாதங்களாக தமிழக அரசின் உதவித்தொகையை சின்ன மயிலாறு தபால் நிலைய ஊழியர் கிறிஸ்துராஜா (வயது 55) நேரில் சென்று வழங்கி வருகிறார். சின்ன மயிலாறில் இருந்து இஞ்சுக்குழிக்குச் செல்வதற்கு வனத்துறையின் அனுமதி பெற்று காரையாறு அணையைப் படகில் கடந்தும், பின்னர் அடர்ந்த வனப்பகுதி வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தும் செல்ல வேண்டும்.
எனவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் வனத்துறை அனுமதியுடன் கிறிஸ்துராஜா அதிகாலையிலேயே அரசின் உதவித்தொகையுடன் சின்ன மயிலாறில் இருந்து காரையாறு அணை மற்றும் வனப்பகுதி வழியாக இஞ்சுக்குழிக்கு பயணிக்கிறார். அங்கு குட்டியம்மாளிடம் உதவித்தொகையை நேரில் வழங்கி விட்டு மீண்டும் சின்ன மயிலாறுக்கு மாலையில் திரும்பி வருகிறார். மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்குவதற்காக, தபால் ஊழியர் விடாமுயற்சியுடன் 10 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் பயணிப்பது அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.