Nellai Mayor issue | நெல்லை திமுக பிளவு?தலைமைக்கு எதிராக கவுன்சிலர்கள் ஸ்டாலின் இரும்புக்கரம்!
நெல்லையில் திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளருக்கு எதிராக, திமுக கவுன்சிலர்களே ஓட்டு போட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபரேஷன் சக்ஸஸ் – பேஷண்ட் டெட் என்பதைப் போல என்னதான் 30 வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் மேயராக வெற்றி பெற்றாலும், திமுக கவுன்சிலர்கள் 14 பேர் தலைமை நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக ஓட்டு போட்டது தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கவுன்சிலர்களின் மொத்த எண்ணிக்கை 44, திமுக கூட்டணி கவுன்சிலர்கள் 7. ஆக மொத்தம் 51 ஓட்டுகளுடன் ஏகோபித்த வெற்றி பெற்றிருக்க வேண்டிய திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன், 30 ஓட்டுகளை மட்டும் பெற்று மார்ஜின் வெற்றியையே பெற்றுள்ளார். இத்தனைக்கும் அவரை எதிர்த்து போட்டியிட்டது திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள முன்னாள் உடன்பிறப்பு தான்.
நெல்லை மாநகராட்சியின் பெரும்பாலான கவுன்சிலர்கள் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வகாப்பின் ஆதரவாளர்களே. இதனால் மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பை அவரிடமே வழங்கியது திமுக தலைமை. அவர் தேர்ந்தெடுத்த வேட்பாளர்தான் ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு. கவுன்சிலர்களுடனான மோதல் போக்கால் தான் முந்தைய மேயர் சரவணன் பதவியை இழந்தார். எனவே எந்த பிரச்சனையும் இல்லாத அடிமட்ட தொண்டர் என்பதால், ராமகிருஷ்ணனுக்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்பி அவரை தலைமையும் டிக் அடித்தது. ஆனால், பதவிக்காக காத்திருந்து ஏமாந்த திமுக கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். இது தலைமைக்கு எதிரான எச்சரிக்கை, மாவட்ட திமுக பிளவுபட்டதன் எதிரொலி என்றெல்லாம் கிசுகிசுக்கின்றனர் உடன்பிறப்புகள்.
களத்தில் இறங்கி விசாரித்தபோது, நெல்லை திமுகவில் இதற்கு முன் மாவட்ட செயலாளர் அணி, அவரது எதிர்ப்பு அணி என்று இரண்டு கோஷ்டிகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது மாவட்ட செயலாளர் அணி, எம் எல் ஏ அணி, முன்னாள் எம் எல் ஏ அணி, மாநகர செயலாளர் அணி, இவர்கள் யாரையும் சேராத அணி என 5 அணிகளாக கட்சி பிளவு பட்டிருப்பதாக வருந்துகின்றனர் தொண்டர்கள்.
அதுமட்டுமல்ல, கட்சி நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக ஓட்டு போடுவது என்பது, தலைமைக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நேரடி சவால் விடுவதைப் போன்றது. பயம் விட்டுப் போன அதிருப்தி கவுன்சிலர்களையும், அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சில சீனியர் தலைகளையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கவில்லை என்றால் – அது மாவட்டத்தில் வேகமாக வளரும் நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜகவுக்கு சாதகமாகிவிடும், 2026-ல் மண்ணைக் கவ்வ வேண்டிவரும் என்றெல்லாம் என்று எச்சரிக்கின்றனர்.