M. Dhanapal Profile: கவுன்சிலருக்கு அடித்த ஜாக்பாட்.. எம்.பி சீட் கொடுத்த இபிஎஸ்.. யார் இந்த தனபால் ?
ADMK Candidate M Dhanapal: மாநிலங்களவை வேட்பாளராக செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தனபால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ADMK RajyaSabha Candidates: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக வாய்ப்பு அளிக்காதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை முன்னிட்டு, வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவிற்கு நான்கு உறுப்பினர்களும், அதிமுகவிற்கு 2 உறுப்பினர்களும் கிடைப்பார். இந்தநிலையில் ஒரு தொகுதி கூட்டணி கட்சி யாருக்காவது ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
வேட்பாளர்கள் யார் யார்?
அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரையும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். அதிமுக கூட்டணிக்கு 70 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், அவர்களின் வேட்பாளர்கள் சிக்கலின்றி வெற்றி பெறுவார்கள் என கூறப்படுகிறது.
யார் இந்த தனபால் ?
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தற்போது ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இதற்கு முன்பு தனபால் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 1991 ஆம் ஆண்டு தேர்தலில், திமுக வேட்பாளர் சொக்கலிங்கம் மற்றும் பாமக வேட்பாளர் பழனிச்சாமி ஆகிய இருவரை தோற்கடித்து 56 சதவீத வாக்குகளை பெற்று தனபால் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு போட்டியிட்ட தனபால் திமுக வேட்பாளர் மூர்த்தியிடம் தோல்வி அடைந்தார்.
இதேபோன்று தனபால் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட சேர்மன் பதவிலும் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காஞ்சிபுரம் தனி தொகுதியில் போட்டியிட தனபால் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தான் யாரும் எதிர்பாராத நிலையில், தனபாலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க உள்ளது. இந்த முடிவு நேற்று நள்ளிரவில் தான் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ஒரு தொகுதி கொடுக்க வேண்டும் என முடிவின் அடிப்படையில் இந்த தொகுதி கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கவுன்சிலராக பணியாற்றி வரும், தனபாலுக்கு தற்போது அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.





















