தடைகளை உடைத்து திரைக்கு வரும் வெற்றிமாறன் படம்.. "பேட் கேர்ள்" ரிலீஸ் எப்போது தெரியுமா?
இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் பேட் கேர்ள். இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்திருந்தார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. மேலும் இப்படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் அளிக்க மறுத்திவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பேட் கேர்ள் பட டீசரால் எதிர்ப்பு
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை இப்படி காட்டுவதா என்றும் இப்போது தான் பெண்கள் படிக்க தொடங்கியுள்ளனர். நல்ல கதைகளை வரும் நேரத்தில் இப்படியான ஒரு படம் தேவையா என்றும் விமர்சித்தனர். மேலும், தனிப்பட்ட முறையிலும் இயக்குநர் வர்ஷா குப்தாவையும் விமர்சிக்க தொடங்கினர். ஆனால், ஒரு பெண் அவளது வாழ்க்கையை வாழ விரும்புவதை தான் படமாக எடுத்திருக்கிறேன். இதனால் தான் சமூக சீரழிவு நடக்கிறதா என்பதையும் கருத்தில் எடுத்துகொள்ள வேண்டியது நமது கடமை என வர்ஷா பரத் கருத்து தெரிவித்தார்.
படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது
டீன் ஏஜ் பெண்களின் மன சிக்கல்களை பேசும் விதமாக உருவாக்கியுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதனிடையே கோவையை சார்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 'பேட் கேர்ள்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என மனு அளித்தது. அதே போல் படத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக இப்படம் ரிலீஸ் செய்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது.
இயக்குநர் மிஷ்கின் ஆதரவு
சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதால் படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. பல்வேறு கட்ட பிரச்னைகளை தாண்டி, இயக்குநர் மிஷ்கின் வர்ஷா பரத்திற்கு ஆதரவாக டிராகன் படத்தின் விழா மேடை ஒன்றில் பேசியிருந்தார். இந்த நேரத்தில் முக்கியமான வேண்டுகோளை வைக்கிறேன். தமிழில் பெண் இயக்குநர்கள் குறைவாக இருக்கின்றனர். பேட் கேர்ள் திரைப்படம் கண்டிப்பாக திரைக்கு வர வேண்டும். வர்ஷா பரத் மாதிரியான பெண்கள் தமிழ் சினிமாவில் இருக்க வேண்டும். பாவம் அந்த குழந்தையின் வளர்ச்சியை தடுக்காதீங்க. அவங்க வரும்போது தான் அவர்களுடைய கருத்தை நாம் பார்த்து புரிந்துகாெள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.
பேட் கேர்ள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்நிலையில், பல தடைகளை தாண்டி பேட் கேர்ள் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், அஞ்சலி சிவராமன், டி.ஜே. அருணாச்சலம், ஹரிது ஹருண், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.





















