Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..
Rinku Singh Priya Saroj Wedding: இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.பி., பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ள தேதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Rinku Singh Priya Saroj Wedding: இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.பி., பிரியா சரோஜ் திருமணம் தொடர்பான பேச்சு கடந்த ஜனவரி மாதம் வெளியானது.
ரிங்கு சிங் திருமணம்:
இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.பி., பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ள தேதியை பல்வேறு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டின் இறுதியில் வாரணாசியில் பிரமாண்டமாக நடைபெற உள்ள திருமணத்தில் இருவரும் தங்களது வாழ்வின் அடுத்தகட்ட பயணத்தை தொடங்க உள்ளனர். திருமணம் தொடர்பான பேச்சு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அப்போது பேசிய பிரியா சரோஜின் தந்தை, ரிங்கு சிங்கின் தந்தை உடன் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியதாக விளக்கினார்.
ரிங்கு சிங் திருமணம் எங்கு? எப்போது?
வெளியாகியுள்ள தகவல்களின்படி, வரும் நவம்பர் 18ம் தேதி வாரணாசியில் ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜின் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள தாஜ் ஓட்டலில் இந்த திருமணம் நடைபெற உள்ளதாம். அதேநேரம், இந்த தம்பதிக்கான மோதிரம் மாறிக்கொள்ளும் நிச்சயதார்த்த நிகழ்வு வரும் ஜுன் 8ம் தேதி லக்னோவில் உள்ள 7 ஸ்டார் ஓட்டலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். இவர்களுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதனை பிரியா குடும்பத்தினர் மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பிரியா சரோஜ்?
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான துஃபானி சரோஜினியின் மகள் தான் பிரியா சரோஜ். வாரணாசியில் உள்ள கார்கியோன் கிராமத்தில் பிறந்த பிரியா, பல வருடங்களாக சமாஜ்வாதி கட்சி வாயிலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள மச்சிலிஷர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞரான பிரியா, கடந்த 2022ம் ஆண்டு தனது தந்தைக்கு ஆதரவாக சட்டமன்ற தேர்தலில் பரப்புரை மேற்கொண்டு கவனம் ஈர்த்தார். தனது இளநிலை பட்டத்தை டெல்லி பல்கலைக்கழகத்திலும், சட்டபடிப்பை அமிதி யுனிவெர்சிட்டியிலும் பூர்த்தி செய்தார்.
ரிங்கு சிங்:
கடந்த 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது குஜராத் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசி, கொல்கத்தா அணிக்கு த்ரில் வெற்றியை பரிசாக்கினார். இதன் மூலம் பிரபலமானவர், இந்திய அணியிலும் அறிமுகமானார். அதன்படி, தற்போது வரை 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக 69 ரன்கள் உட்பட 3 அரைசதங்களை ரிங்கு சிங் விளாசியுள்ளார்.





















