Nellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவி
உன் சாதிக்காரன் என் வீட்டுல வேலை பாக்கிறான், ஒழுங்கா நீயே பதவி வேண்டாம்னு எழுதி கொடுத்துட்டு ஓடிப்போயிடு என்று பேரூராட்சி தலைவியை பிற சாதி வார்டு உறுப்பினரின் கணவன்மார்கள் மிரட்டியதாக பகீர் புகார் எழுந்துள்ளது.
திருநெல்வேலி, மணிமுத்தாறு சிறப்பு நிலை பேருராட்சியின் தலைவியாக இருப்பவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அந்தோணியம்மாள். திமுகவை சேர்ந்த இவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக வார்டு உறுப்பினர்களின் கணவன்கள் மற்றும் உறவினர்கள் சாதி ரீதியாக தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட டிஎஸ்பி மற்றும் கலெக்டெருக்கு புகார் கொடுத்துள்ளார் அந்தோணியம்மாள்.
அதில், ’மாஞ்சோலையில் ஐந்து தலைமுறையாக தேயிலை தோட்ட கூலி தொழிலாளர்களாக வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட ஏழை குடும்பத்தைச் சேர்ந்த என்னை முதல்வர் ஸ்டாலின், கூலி வேலை பார்த்து வந்த இடத்திலேயே பேரூராட்சி தலைவி பதவிக்கு கொண்டு வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிற சாதி வார்டு உறுப்பினர்களின் உறவினர்களாலும் கணவன்மார்களாலும் கடுமையான சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் மிரட்டலுக்கும் உள்ளாகியிருக்கிறேன். பெரும்பாலான பேரூராட்சி கூட்டங்களில் பெண் வராடு உறுப்பினர்களுக்கு பதில் அவர்களது கணவர்கள் தான் பங்கேற்கின்றனர். பேரூராட்சி கூட்டங்களுக்கு குடிபோதையில் வருவதை தட்டிக் கேட்டால், சாதிய ரீதியாக கடுமையான சொற்களால் பொது இடங்களில் வைத்து திட்டி மிரட்டல் விடுக்கின்றனர்.
மணிமுத்தாறு பேரூராட்சி ஆலடியூர் 4வது வார்டு உறுப்பினர் செல்வியின் கணவர் மாரியப்பன், கீழ ஏர்மாள்புரம் 7 வது வார்டு உறுப்பினர் பிரேமாவின் கணவர் காசி ஆகிய இருவரும் ”ஒழுங்கா பதவி வேண்டாம் என்று எழுதி கொடுத்துட்டு ஓடிடு. இல்லனா உடம்பு சரியில்லை என்று எழுதி கொடுத்துட்டு ஊரை விட்டு ஓடி விடு” என்று மிரட்டினர்கள். உடனடியாக நான், மரியாதையாக பேசுங்கள் என்று சொன்னபோது ” உன் சாதிக்காரன் என் வீட்டில் வேலை பார்க்கிறான், உனக்கு என்ன மரியாதை கொடுக்கணும்” என்று சாதிய ரீதியாக தரக்குறைவாக பேசினர்.
அதன்பின் அவர்கள் 'காண்ட்ராக்டை நாங்க சொல்கிற ஆளுக்கு தான் கொடுக்கணும், நாங்க சொல்றபடி தான் வேலை நடக்கணும், உன்னால எங்க பேச்சைக் கேட்டு முடியலைன்னா எழுதி கொடுத்துட்டு ஊரைவிட்டு ஓடிவிடு. போகலனா உன்னை கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்” என அந்தோணியம்மாள் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி சாதிய ரீதியாக அவதூறு பரப்பி கொலை மிரட்டல் விடுக்கும் நபர்களால் உயிருக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் இருப்பதால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அந்தோணியம்மாளை தொடர்பு கொண்ட போது 2 ஆண்டுகளாக தனக்கு இந்த கொடுமை நடப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.