தைலாபுரம் வந்த அன்புமணி ராமதாஸ் - பொதுக்குழு கூட்டத்தை சட்டென்று முடித்துகொண்ட ராமதாஸ்..!
மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு ராமதாஸ் வந்துள்ள நிலையில் தைலாபுரத்தால் உள்ள அவரது வீட்டிற்கு அன்புமணி சென்றதை அடுத்து பொதுக்குழு கூட்டத்தை சட்டென்று ராமதாஸ் முடித்துகொண்டார்

அன்புமணி vs ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து முரண்பாடு காரணமாக பாமகவில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ஆதரவாளர்களை தொடர்ச்சியாக நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார் இந்த நிலையில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நிர்வாக குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழுவை நடத்தி வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்களின் பொதுக்குழு கூட்டம்
அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் பூ.தா அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சி கௌரவ தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று பேசினார்.
ராமதாஸ் மூன்று நிமிட பேச்சு
மிகவும் பரபரப்பு கிடையே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக இருந்தது இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசிய மருத்துவர் ராமதாஸ், பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற உள்ள வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று நேரில் அழைப்பு விடுத்து இருப்பதாக தெரிவித்த அவர் மூன்று நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார்.
தைலாபுரம் சென்ற அன்புமணி ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கும்பகோணத்தில் நடந்த பாமக கூட்டத்தில் பேசிய போது அன்புமணி தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று பேசி இருந்தார். இந்த நிலையில் ராமதாஸ் இல்லாத நேரத்தில் தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி சென்றுள்ளது பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி சூழலில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ள நிலையில் இதுகுறித்து தனது பேச்சில் டாக்டர் ராமதாஸ் பரபரப்பாக பேசுவார் என்று தொண்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், பேச்சை உடனடியாக முடித்தது பெரும் பேசு பொருளாக அமைந்தது. தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்துவிட்டு டாக்டர் ராமதாஸ் கூட்டத்தை முடித்து விட்டு வெளியேறி சென்றார்.





















