IND Vs ENG Lords Test: ஆர்ச்சர் Vs பும்ரா - 3வது டெஸ்டில் இங்கி., வதைக்குமா இந்தியா? லார்ட்ஸில் மிரட்டலான ஆடுகளம்?
IND Vs ENG Lords Test: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

IND Vs ENG Lords Test: மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் 4 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆர்ச்சர் இடம்பெற்றுள்ளார்.
இந்தியா Vs இங்கிலாந்து - 3வது டெஸ்ட்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தான், தொடரின் மூன்றாவது போட்டி கிரிக்கெட்டின் மெக்கா என வர்ணிக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறர்து. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வர்க் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்ராட் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
தொடரில் முன்னிலை பெறப்போவது யார்?
முதல் போட்டியில் அபாரமான பேட்டிங்கின் மூலம் இங்கிலாந்து அணி வெற்றியை பதிவு செய்தது. அதேநேரம் இரண்டாவது போட்டியில் அபாரமான பேட்டிங் மட்டுமின்றி, துல்லியமான பந்து வீச்சின் மூலம் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறப்போவது யார் என்பது இந்திய அணி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
பும்ரா, ஆர்ச்சர் கம்பேக்:
இரண்டாவது டெஸ்டில் ஓய்வளிக்கப்பட்டு இருந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்குகிறார். அதேநேரம், முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடந்த 2021ம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளார். இரண்டு தரமான பந்துவீச்சாளர்கள் லார்ட்ஸ் போட்டியில் களமிறங்குவது ஆட்டத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது.
லார்ட்ஸ் மைதானம் எப்படி?
முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், லார்ட்ஸ் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிட்-விக்கெட்டிலிருந்து கவர்ஸ் வரையிலான 8 அடி சாய்வானது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பக்கவாட்டு சீம் அசைவை மேற்பரப்பிலிருந்து அகற்ற உதவும். லார்ட்ஸில் உள்ள ஸ்ட்ரிப்பில் 3வது டெஸ்டுக்கு முன்னதாக போதுமான புல் இருந்தது. இருப்பினும், அது போட்டிக்கு முன்னதாக சுருக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், லீட்ஸ் மற்றும் பர்மிங்காம் போலல்லாமல், லார்ட்ஸ் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
லார்ட்ஸில் இந்திய அணி எப்படி?
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் தோல்வியும், 4 போட்டிகளில் டிராவும் கண்டுள்ளது. அதேநேரம், கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில், இரண்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
வானிலை அறிக்கை விவரம்:
போட்டி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஜுலை 10 தொடங்கி 14ம் தேதி வரையில், லார்ட்ஸ் மைதானம் உள்ள பகுதியில் மழைக்கு வாய்ப்பில்லை என்றே வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 17 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை அங்கு வெப்பம் நீடிக்கலாம்.
போட்டிக்கான உத்தேச அணி விவரம்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேட்ச்), ரிஷப் பண்ட் (விசி & டபிள்யூ), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து: பென் டக்கெட், ஜாக் கிராலி, ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன் மற்றும் ஷோயப் பஷீர்.




















