கில் கேப்டன்சி.. 10வது மாடியிலிருந்து குதிக்க சொன்னாலும் தயங்க கூடாது! கவாஸ்கர் புகழாரம்
கில் இப்போது யாரையாவது 10வது மாடியில் இருந்து குதிக்கச் சொன்னால், நிச்சயமாக அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் கில் ஒரு அசாதாரண கேப்டன் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்

இந்திய அணி கேப்டன் கில் 10வது மாடியிலிருந்து குதிக்க சொன்னாலும் குதிக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் க்வாஸ்கர் பாராட்டியுள்ளார்.
முதல் முறையாக கேப்டன்:
இந்திய அணியின் கேப்டனாக முதல் முறையாக இங்கிலாந்து சென்றுள்ள கில் லீட்ஸில் தோல்வியடைந்த போதிலும், இந்திய அணி எட்ஜ்பாஸ்டனில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. எட்ஜ்பாஸ்டனில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கில் மொத்தமாக 430 ரன்கள். அதில், அவர் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் எடுத்தார். தொடருக்கு முன்னதாக கில்லுக்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டது விமர்சனத்துக்குள்ளானது.
கவாஸ்கர் பாராட்டு
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கில்லை பாராட்டியுள்ளார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்குப் பிறகு டிரஸ்ஸிங் அறையில் கில் மீதான மரியாதை அதிகரித்துள்ளதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
10வது மாடியில் குதிக்க சொன்னாலும்..
"கில் இந்த தொடரை மிகவும் பொறுமையாக வழிநடத்தி வருகிறார். அவர் ஒவ்வொரு முடிவையும் பொருமையாகஎடுத்து வருகிறார். அது பாராட்டத்தக்கது. இந்திய வீரர்கள் கில்லை கேப்டனாக ஏற்றுக்கொள்வது எளிதாகிவிட்டது என்று நான் நினைக்கிறேன். அவர் சொல்வதை அனைவரும் நம்ப வேண்டும் என்று நினைக்கிறேன். கில் இப்போது யாரையாவது 10வது மாடியில் இருந்து குதிக்கச் சொன்னால், நிச்சயமாக அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் கில் ஒரு அசாதாரண கேப்டன். போட்டிகள் தொடரும்போது அவர் மிகவும் முதிர்ச்சியடைந்த கேப்டனாக மாறுவார் என்று நான் நம்புகிறேன்" என்று கவாஸ்கர் கூறியுள்ளார்
3வது டெஸ்ட்:
இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை 10 ஆம் தேதி லார்ட்ஸில் தொடங்குகிறது. லார்ட்ஸ் மைதானம் உலக கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 19 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால் இந்தியா இந்த மைதானத்தில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா இங்கு 12 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. மேலும் அவர்கள் 4 போட்டிகளில் டிரா செய்துள்ளனர்.
கடைசி மூன்று டெஸ்ட்:
லார்ட்ஸில் இந்தியா விளையாடிய கடைசி மூன்று போட்டிகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன? 2014 ஆம் ஆண்டில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, லார்ட்ஸ் டெஸ்டில் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2018 ஆம் ஆண்டில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 2021 ஆம் ஆண்டில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.





















