Kallakurichi : கள்ளச்சாராய விற்பனை ஜோர் கள்ளக்குறிச்சியில் மீண்டும் பகீர்.. ஆக்ஷனில் இறங்கிய POLICE
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவதாக குற்றம்சாட்டிய மக்கள் உடனடி நடவடிக்கை தேவை என கோரிக்கை வைத்தார். கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசுத் தரப்பில் இருந்து உத்தரவு போடப்பட்டது. இதன் காரணமாக போலீசார் கள்ளச்சாரயத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன்ர்.
இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதியின் உத்தவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வராயம் மலைப்பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஏழுமலை, உதவி ஆய்வாளர் மணிபாரதி ஆகியோர் தலைமையில் தும்பராம்பட்டு மற்றும் வெள்ளரிக்காடு ஆகிய கிராமங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரி டியூப், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 60 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 100 லிட்டர் ஆகியவற்றை கண்டுபிடித்த போலீசார், கைப்பற்றிய சாராய ஊரலை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தசின்னையன்(58) மற்றும் வெள்ளரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை(27) ஆகிய இருவரையும் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் பலப்பேர் உயிரிழந்த நிலைய் இது போன்ற சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்து சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.