IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
IPL 2025 MI Win: மும்பை குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்று குவாலிஃபயர் 2-க்கு தகுதி பெற்றது. மும்பை அணி இறுதிப் போட்க்குள் சென்று மீண்டும் கோப்பையை வெல்லுமா.?

குவாலிஃபயர் 2-வில் பஞ்சாப்புடன் ஆடப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. அதில், மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி குவாலிஃபயர் 2-க்கு தகுதி பெற்றது. ஜூன் 1ம் தேதி நடைபெறும் எலிமினேட்டரில், பஞ்சாப் அணியுடன் அவர்கள் மோத உள்ளனர்.
பார்ஸ்டோ சரவெடி.. பட்டையை கிளப்பிய ரோகித்.. 228 ரன்கள் குவித்த மும்பை
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா -ஜானி பார்ஸ்டோ ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டத்தை தொடங்கியது முதலே இருவரும் அதிரடியாகவே ஆடினர். ஓவருக்கு 12 ரன்கள் வீதம் இருவரும் விளாசினர். பார்ஸ்டோ பவுண்டரிம், சிக்ஸருமாக விளாசினார். அபாரமாக ஆடி அரைசதத்தை நெருங்கிய ஜானி பார்ஸ்டோ சாய் கிஷோர் சுழலில் அவுட்டானார். அவர் 22 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இதனால், மும்பையின் ரன்வேகம் குறையவே இல்லை. ரோகித் - சூர்யா ஜோடி அபாரமாக ஆடியது. இந்த ஜோடி 100 ரன்களை கடந்து 150 ரன்களை நெருங்கியது. சூர்யா பட்டாசாய் வெடித்தார். மறுமுனையில் ரோகித் சர்மா தனது ரன்வேட்டையை தனியாக நடத்திக் கொண்டிருந்தார்.
அரைசதம் கடந்தும் ரோகித்சர்மா பட்டையை கிளப்பினார். சூர்யகுமார் யாதவும் சாய் கிஷோர் சுழலில் சிக்கி அவுட்டானார். அவர் 20 பந்துகளில் 1பவுண்டரி 3 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு ரோகித்சர்மா தனது ரன்வேகத்தை மேலும் அதிகரித்தார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார்.
அவர் 50 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் திலக் வர்மாவை சிராஜ் அவுட்டாக்கினார். அவர் 11 பந்துகளில் 3 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால் சற்று ரன்வேகம் குறைந்தது.
பாண்டயா தாண்டவம்:
நமன்தீர் அதிரடி காட்ட முயற்சித்த உடனே பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். ஆனாலும். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டினார். கடைசி ஓவரை கோட்சி பதற்றத்துடன் வீசியதால் ஒயிட்கள் ஏராளமான வந்தது. இதனால் 9 பந்துகளை வீசினார். இதில் 3 சிக்ஸர் வந்ததால் மும்பை அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 3 சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்தார்.
கோட்ஸி 3 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்தார். சிராஜ் 4 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்.. கோட்டை விட்ட குஜராத்
இதைத் தொடர்ந்து, 229 ரன்கள் வெற்றி இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கிய நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்த அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான சுப்மன் கில் 1 ரன் எடுத்திருந்த நிலையில், தான் சந்தித்த 2-வது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினா.
மறுமுனையில் தமிழ் பாயான சாய் சுதர்சன் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிக் கொண்டிருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த குசல் மென்டிஸ் 2 சிக்சர்கள் 1 பவுண்டரி அடித்து அதிரடி காட்டிய நிலையில், 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, மற்றொரு தமிழ் பாயான வாஷிங்டன் சுந்தர் சாய் சுதர்ஷனுடன் ஜோடி சேர்ந்து, அதிரிபுதிரியாக ஆடினார். அவரை அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், பும்ராவின் யார்க்கருக்கு பலியானார். அவர் 24 பந்துகளில் 3 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து, இம்பாக்ட் ப்ளேயராக ருதர்ஃபோர்ட் களமிறங்கி, அவரும் சிறப்பாக ஆடினார்.
இந்த கட்டத்தில், குஜராத் அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்பதுபோலதான் ஆட்டம் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அந்த நிலையில், சதத்தை எட்டிவிடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், 49 பந்துகளில் 1 சிக்சர் 10 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து, ரிச்சர்ட் க்ளீசனின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ராகுல் தெவாட்டியா களமிறங்கி சற்று அதிரடி காட்டினார். இந்நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ருதர்ஃபோர்ட், 15 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால், ஆட்டம் மும்பையின் பக்கம் சாய்ந்தது. ருதர்ஃபோர்டை தொடர்ந்து ஷாருக் கான் களமிறங்கி ஒருபுறம் அதிரடி காட்டினாலும், மறுபுறம் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்ததால், கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், ஏற்கனவே முந்தைய ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்திருந்த ஷாருக்கான், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, தெவாட்டியா மற்றும் ரஷித் கானால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால், மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, குவாலிஃபயர் 2-க்கு தகுதி பெற்றது.
மும்பை தரப்பில், அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா சிறப்பாக பந்துவீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, அதிரடி காட்டிவந்த வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 1ல் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், கோப்பைக்கு ஆர்சிபி அணிக்காக மல்லுகட்டப்போவது யார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. ஆம், பஞ்சாப் அணியுடன், ஜூன் 1-ம் தேதி மும்பை அணி மோதுகிறது. அதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, மும்பை அணி மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லுமா அல்லது, 10 வருட காத்திருப்பிற்குப் பின் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கும் பெங்களூரு அணி கோப்பையை வெல்லுமா.? பொறுத்திருந்து பார்க்கலாம்.




















