IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதிய மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் ஐஐடி சென்னை உள்ளிட்ட பல்வேறு ஐஐடிக்களைச் சுற்றிப் பார்க்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐஐடி சென்னை ஜேஇஇ தேர்வர்களையும் அவர்களின் பெற்றோரையும் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் நடைபெறும் ‘நேரடி செயல்விளக்க நாள்’ (Demo Day) நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கிறது.
எந்தெந்த ஐஐடிக்களில்...
இதன் மூலம் தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுடன் தொடர்புகொள்ளவும், ஆதாரங்களில் இருந்து நேரடியாக உண்மையான, புத்தம்புது தகவல்களைப் பெறவும் அவர்களுக்கு ஓர் வாய்ப்பாக அமையும். டெல்லி, மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர், விஜயவாடா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நேரடி நிகழ்வுகள் நடைபெறும்.
மேலும், இளங்கலைப் படிப்பிற்கு முந்தைய நிலையில் முதல் கொள்கைகளில் இருந்து கற்பித்தல் மூலம் தங்களது மாணவர்களின் கல்விப் பயணத்தில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக, நடப்பாண்டில் ஐஐடி மெட்ராஸ் ‘முதல் கொள்கைகளுக்கான ஆசிரியர் விருதை’ (First Principles Teachers Award) அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்நிகழ்வுகளில் பங்கேற்க குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே இருப்பதால், ஆர்வமுள்ள ஜேஇஇ தேர்வர்கள் விரைவில் பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் https://www.askiitm.com/demo-day என்னும் வலைதளத்தில் பதிவு செய்யலாம்.
என்ன பலன்?
நேரடி செயல்விளக்க நிகழ்வுகள் மூலம், புதிய படிப்புகளின் அறிமுகம் போன்ற சமீபத்திய மாற்றங்கள் குறித்தும் மாணவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவுப் பகுப்பாய்வு (Data Analytics - AIDA) பாடங்களைத் தவிர, ஐஐடி மெட்ராஸ் மேலும் இரு புதிய பிடெக் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது - கணக்கீட்டுப் பொறியியல் மற்றும் இயக்கவியல் (Computational Engineering and Mechanics -CEM), கருவி மயமாக்கல் மற்றும் உயிரிமருத்துவப் பொறியியல் (Instrumentation and Biomedical Engineering -iBME).
ஐஐடி மெட்ராஸ் அல்லது மற்ற 6 இடங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், ஜூன் 3, 2025 அன்று திட்டமிடப்பட்டுள்ள ஆன்லைன் அமர்வில் பங்கேற்கலாம். அப்போது, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, இதர ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், இக்கல்வி நிறுவன வளாகத்தின் கல்வி மற்றும் கல்வி சாராத அம்சங்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்க வருமாறு தேர்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி கூறும்போது, “இந்த வளாகத்தைப் பார்வையிடவும் எங்களை சந்திக்கவும் வருமாறு ஆர்வமுடைய மாணவர்களையும், பெற்றோர்களையும் அழைக்கிறோம். அதுமட்டுமின்றி ஐஐடி மெட்ராஸ் ஏன் பல்லாண்டுகளாக தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் முதலிடத்தில் (NIRF #1) உள்ளது என்பதையும், சிறந்த இடமாக எவ்வாறு விளங்குகிறது என்பதையும் காண முடியும்.
ஐஐடி மிகச்சிறந்த ஆசிரியர்கள், அதிநவீன ஆய்வகங்கள், நாட்டிற்கு பயனளிக்கும் அதிநவீன நடைமுறை செயலாக்க ஆராய்ச்சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி, கடந்த நிதியாண்டில் மட்டும் 104 ஸ்டார்ட்-அப்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்திருப்பதுடன், நாட்டிலேயே சிறந்த ஆழ்நிலை புத்தொழில் ஊக்குவிப்பு (Deep-Tech Start-up Incubation Ecosystem) மையமாகவும் விளங்குகிறது. 2024-25 நிதியாண்டில் இக்கல்வி நிறுவனம் 417 காப்புரிமைகளைப் பெறுவதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.






















