தென்மேற்கு பருவமழை... மேட்டூர் அணையிலிருந்து 2.5 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க வாய்ப்பு
வெள்ள பாதிப்பு குறித்தும் மழை பாதிப்பு குறித்தும் பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுறைக்கு 1077, 2450498, 2452202 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சேலம் மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வெள்ள தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேட்டூர் அணையிலிருந்து 2.5 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர்களுடன் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம், அணை நிலவரங்கள் முழுமையாக கண்காணிப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

கூட்டத்திற்கு பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் போது பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் உடனடியாக பாதிப்புகளை சரி செய்வதற்காக வருவாய் துறை, தீயணைப்பு துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னேரி வயல் காடு, பச்சப்பட்டி, சிவதாபுரம் உள்ளிட்ட மழை பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
வெள்ள பாதிப்பு குறித்தும் மழை பாதிப்பு குறித்தும் பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுறைக்கு 1077, 2450498, 2452202 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சேலம் மாநகராட்சி சிவதாபுரம் பகுதியில் மழை நீர் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி நீர்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ட்ரோன் மூலம் வெள்ள தடுப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

சேலம் மாநகராட்சியில் நீர் நிலை ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அறிக்கையை கிடைத்தவுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் குப்பைகளை நீர் நிலைகள் மற்றும் கழிவுநீர் வடிகால்களில் பொதுமக்கள் போடாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் வீடுவீடாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும் என்றார்.
தென்மேற்கு பருவ மழை முன்னிட்டு மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் முகாம்கள் மற்றும் மருத்துவ முகங்கள் தேவையான இடத்தில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.





















