மேலும் அறிய
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.

தி.மு.க., பொதுக்குழு திடல்
Source : whats app
பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைஞர் திடல் அரங்கம்
மதுரை உத்தங்குடியில் நாளை தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கான பணிகளை முதல் கட்சியாக திமுக துவங்கியுள்ளது. தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம், மண்டல வாரியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மண்டல பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மதுரையில் ஜூன் 1ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அண்ணா அறிவாலயம் போல் அரங்கம்
வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது. மதுரை, உத்தங்குடியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் குளுகுளு ஏசி வசதியுடன் கலைஞர் திடல் தயாராகியுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்துள்ளன. கூட்ட திடலின் முகப்பில் பசுமையாக காட்சி தரும் வகையில் பிரமாண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் நடுவே செயற்கை நீரூற்று, அதன் மத்தியில் 100 அடி உயர கொடி கம்பத்தில் திமுகவின் பிரமாண்ட இரு வண்ண கொடியும் பறக்கிறது. பொதுக்குழு அரங்கத்தின் முகப்பு சென்னை அண்ணா அறிவாலயம் போல் காட்சியளிக்கிறது.
அசைவ மற்றும் சைவ உணவுகள்
கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு திமுக தலைமைக் கழகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களுக்காக, இந்த அரங்கத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை, தாராளமாக அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தலைமைக்கழக நிர்வாகிகள் அமர்வதற்கு என சிறப்பு இருக்கைகளும், கலைஞர் அரங்கம் என்ற பெயரில் பிரமாண்ட மேடையும், எல்.இ.டி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 10 மணிக்கு துவங்கும் பொதுக்குழு கூட்டம் பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டு விட்டு செல்லும் வகையில், பிரமாண்டமான குளிரூட்டப்பட்ட உணவுக்கூடமும் தயார் நிலையில் உள்ளது. தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அசைவ மற்றும் சைவ உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. இதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். மேலும் மதுரையின் புகழைக் கூறும் ஜிகர்தண்டா, புவிசார் குறியீடு பெற்ற சோழவந்தான் வெற்றிலையும் வழங்கப்படுகிறது.
கூடுதல் வசதிகள்
பொதுக்குழுவிற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மூன்று சாலைகள் பொதுக்குழு திடலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய தலைவர்கள் வருவதற்கு ஒரு சாலையும், இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய நிர்வாகிகள் வருவதற்கு ஒரு சாலை, பொதுக்குழுவினர் வருவதற்கு ஒரு சாலை என அந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன பொதுக்குழு அரங்கத்திற்கு பின்புறமாக வாகனங்களை விசாலமாக நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் நடமாடும் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ரோடு ஷோ
பொதுக்குழு மாநாடு நடைபெறும் பகுதி முழுவதும் திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் வகையில் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழி மற்றும் முக்கிய சாலைகள் என மதுரை மாவட்டத்தின் 60 கிமீ சுற்றளவில் சாலை ஓரமாக திமுகவின் கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடமான உத்தங்குடி, மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது.
பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்தார். விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு, மாலை 4 மணிக்கு 25 கிமீ தூரத்திற்கு பிரமாண்ட ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார். அவனியாபுரம் மருதுபாண்டியர்கள் சிலையில் இருந்து தனது ரோடுஷோவை துவக்குகிறார். வில்லாபுரம், ஜெயவிலாஸ் பாலம் சந்திப்பு, ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், சுந்தர்ராஜபுரம் மார்க்கெட், டிவிஎஸ் நகர் புதிய தரைப்பாலம், பழங்காநத்தம், வஉசி மேம்பாலம், பைபாஸ் ரோடு, பொன்மேனி சந்திப்பு, காளவாசல், குரு தியேட்டர் சந்திப்பு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டானா, ஆரப்பாளையம் கிராஸ் மற்றும் மன்னர் திருமலைநாயக்கர் சிலை, புது ஜெயில் ரோடு சந்திப்பு வரை சுமார் 25 கிமீ தூரத்திற்கு ரோடு ஷோ நடத்துகிறார். ரோடு ஷோ முடிந்ததும் மதுரை புது ஜெயில் ரோடு சந்திப்பில் முன்னாள் மேயர் முத்து சிலையை திறந்து வைக்கிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















