பாமகவில் யாருடைய அறிவிப்பு செல்லும்? ராமதாசுக்கு என்ன அதிகாரம்? கட்சி விதிகள் சொல்வதென்ன ?
Anbumani Vs Ramadoss: "பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட விதிகளின்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கே அனைத்து அதிகாரம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன"

பாட்டாளி மக்கள் கட்சியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கிடையே, கருத்து வேறுபாடு பாமகவில் மிகப்பெரிய பிரச்சினையாக இழந்துள்ளது. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்ததை தொடர்ந்து பிரச்சினை பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் ஒரு சில நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். ராமதாஸ் நியமனம் செய்த அடுத்த சில நிமிடங்களிலே, கட்சியிலிருந்து நீக்கப்பட்டோர் அதே பதிவில் தொடர்வதாக அன்புமணி தரப்பில் அறிவிப்பு வெளியாக வருகிறது.
யாருக்கு அதிகாரம் ?
இதனைத் தொடர்ந்து பாமகவில் யாருக்கு அதிகாரம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பாமக தொடர்பில் விசாரித்த போது: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்திய அரசியல் சாசனத்தின் 19-ஆம் பிரிவு "சங்கம் சேரும் உரிமையை" ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. இந்த உரிமையின் கீழ் அரசியல் கட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஒரு கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்கள். அவர்கள் சார்பான பொதுக்குழு உறுப்பினர்களே கட்சியின் அனைத்து நடைமுறைகளையும் தீர்மானிக்கின்றனர். இது இந்தியாவின் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும் என விளக்கம் அளிக்கின்றனர்.
பொதுக்குழுவிற்கு அதிகாரம்
தேர்தல் ஆணையம் விதிகளின் படி, தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களையும் ஜனநாயக முறைப்படி பொதுக்குழுவே தீர்மானிக்கிறது. பொதுக்குழு தேர்வு செய்கிறது. இதர பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை தலைவருக்கு பொதுக்குழு வழங்குகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகப் படி பொதுக்குழு உறுப்பினர்களால் தலைவர் தேர்வு செய்யப்படாவிட்டால், அத்தகைய கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுதான் இந்தியாவின் சட்டம். பாமக பொதுக்குழுவால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கே கட்சியின் பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளது. பாமகவின் இன்னொரு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் பாமகவின் பொதுக்குழுவுக்கே உள்ளது எனவும் பாமக தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அன்புமணி ராமதாஸுக்கு 100க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் அன்புமணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களின் 97% பேர் ஆதரவு தெரிவிப்பதாகவும் அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.





















