கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் பதட்டப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை:
அப்போது, அவர் கூறியதாவது, உருமாறிய கொரோனா பாதிப்பை ஏற்படுத்தாது. பதட்டத்தை ஏற்படுத்துவது தவறான செய்திகளை பரப்புவது சமூகத்திற்கு கேடாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ கட்டமைப்பு ஆக்சிஜன் கட்டமைப்பாக இருந்தாலும், படுக்கைகள் கட்டமைப்பாக இருந்தாலும் சரி ரொம்ப சிறப்பாக தேவையான அளவாக உள்ளது. பதட்டப்பட வேண்டியது இல்லை.
38 பேருக்கு கொரோனா:
உலகம் முழுவதும் உள்ளது. மூச்சுத்திணறல் ஏற்படும், படுக்கைகள் கிடைக்காமல் போய்விடும் போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். வதந்தி தான் பெரிய நோய். தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. பரிசோதனைகள் செய்யும்போது கொரோனா என்று தெரிந்துவிடும். கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு இருந்தது. கொரோனாவால் இறப்பா? என்றால் இல்லை. அது ஏற்கனவே இருந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தார்.
அமெரிக்கா சென்றது ஏன்?
உலகின் பழைய மருத்துவ சங்கம் அமெரிக்க மருத்துவ சங்கம். அவர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தினோம். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட 3, 4 மருத்துவ கல்லூரிகள் இணைந்து நடத்திய ஆய்வில் நடப்பது, உடற்பயிற்சி எடுப்பது மேற்கொண்ட பிறகு மன வலிமைக்கும், உடல்வலிமைக்கும் இந்த உடற்பயிற்சி எந்த வகையில் உறுதுணையாக இருந்தது என்பதே ஆய்வு.
அந்த பரிசோதனைகளின் முடிவை எடுத்து பேசுவதற்கான வாய்ப்பு. இதற்கு தமிழக அரசுக்கு எந்த செலவும் எனக்கு இல்லை. மொத்த செலவையும் அமெரிக்க சங்கமே ஏற்றுக்கொண்டனர். டிரைவரே இல்லாமல் ஒரு கார். அதில் தினமும் பயணித்தேன். அதை ஒரு பதிவாக போட்டேன். அது அவர் ( முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்) முயற்சிக்கலாம்.
மருத்துவ முகாம்கள்:
பதட்டப்பட வேண்டியது இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அனைத்து நேரங்களிலும் சொல்ல வேண்டிய ஒன்று. இந்த மாதிரி மழைக்காலத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தியிருக்கிறோம். குடிசைப்பகுதிகளில் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். தேவைகள் இருக்கும் இடத்தில் நடத்துகிறோம்.
டெங்கு உயிரிழப்பு:
டெங்கு காய்ச்சல் 2017, 2012ல்தான் அதிகபட்ச உயிரிழப்பு. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 10, 11 அந்தளவுதான் உயிரிழப்பு இருந்தது. இணை நோய்களால் ஏற்பட்ட இறப்புகள்தான். டெங்குவைப் பொறுத்தவரை நேற்று ஒருநாள் பாதிப்பு 35. 6 மாதத்தில் 4 உயிரிழப்புகள். உயிரிழப்புகள் மிக துல்லியமாக கண்காணிக்கப்படுகிறது. கொசுக்கள் தேங்காமல் இருக்கும் பணியை உள்ளாட்சி நன்றாக செய்து வருகிறது என்பதற்கு டெங்குவின் இன்றைய நிலை சான்று.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் நல்லது. ஆண் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமமாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை கொண்டு வர இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.





















