தமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்
திமுக கூட்டணிக்கு செக் வைக்கும் வகையில் தெலுங்கு மக்களின் வாக்குகளை குறிவைத்து தமிழ்நாட்டுக்குள் ஜனசேனா கட்சி அடியெடுத்து வைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 2026 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இந்த கட்சி கைகோர்க்கும் என்றும், பவன் கல்யாணின் சென்னை பயணத்தின் பின்னணியில் பாஜகவின் ஸ்கெட்ச் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆந்திரபிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்த பவன் கல்யாண் துணை முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டு அரசியலில் அவரது பெயர் அடிக்கடி அடிபட்டு வருகிறது. சனாதனம் விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்தார் பவன் கல்யாண். சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால் நீங்கள்தான் அழிந்து போவீர்கள் என சொல்லி தமிழக அரசியல் களத்தில் விவாதமாக மாறியது. திமுகவை அட்டாக் செய்த அதே நேரத்தில் அதிமுகவை பாராட்டி சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்தார்.
தமிழக அரசியல் களத்தை உன்னிப்பாக கவனித்து வரும் பவன் கல்யாண், நேரடியாக ENTRY கொடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்கின்றனர். 2026 தேர்தலில் ஜனசேனா கட்சியை தமிழ்நாட்டில் விரிவுபடுத்தும் முடிவை எடுத்துள்ளார் பவன். இந்த கட்சி அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு மக்களின் வாக்குகளை தங்கள் கூட்டணி பக்கம் இழுப்பதற்காக பாஜக தான் ஜனசேனா கட்சியை தமிழ்நாட்டுக்குள் நுழைப்பதாக பேச்சு இருக்கிறது.
தெலுங்கர்களை பொறுத்தவரை திமுக, மதிமுக, தேமுதிக வசம் தான் வாக்கு வங்கி இருக்கிறது. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சாதகமான சூழல் இல்லாததால் பவன் கல்யாணை வைத்து அந்த வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப கணக்கு போடுகின்றனர். பவன் கல்யாண் இத்தனை நாட்களாக ஆக்டிவ்வாக இருந்ததன் பின்னணியிலும் இந்த காரணமே இருக்கிறது.
இந்தநிலையில் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள பவன் கல்யாண் தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நான் தமிழ்நாட்டை விட்டுப் போனாலும் தமிழ்நாடு என்னை விடவில்லை என ஹிண்ட் கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த MGR வாழ்ந்த பூமி தமிழ்நாடு என்று சொல்லி அதிமுகவுடன் தனக்கு நெருக்கமான உறவு இருப்பதாக காட்டியுள்ளார். தனது தமிழக அரசியல் பயணத்திற்கான அடித்தளமாக இந்த நிகழ்ச்சியை பவன் கல்யாண் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தான் பாஜக செய்துள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே விஜய்யின் அரசியல் எண்ட்ரியின் போதே பவன் கல்யாணுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பேசிய நிலையில், அவர் நேரடியாக போட்டிக்கு வருவது தேர்தல் சமயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.





















