என்ன செய்ய போறோம்னு தெரியலையே… நடுத்தர பெற்றோரின் சோகம் எதற்காக?
தனியார் பள்ளிகள் இலவசமாக கல்வி வழங்கும் நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசு மூலமாக மத்திய அரசு வழங்கி வருகிறது.

தஞ்சாவூர்: என்னங்க செய்வோம்... இதைதான் நம்பியிருந்தோம். இப்படி ஆகிடுச்சே என்று நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெற்றோர்கள் தவிக்கின்றனர். அவர்களின் தவிப்புக்கு இதுதான் காரணம்.
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் ஏழை மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. 2-ந் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும் நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர்கள் தவித்த வண்ணம் உள்ளனர். இந்தியாவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009-ன் (ஆர்.டி.இ) படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் பின்தங்கிய பிரிவினருக்கான 25 இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகள் இலவசமாக கல்வி வழங்கும் நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசு மூலமாக மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆங்கில மொழி பயிற்சி என அரசுப் பள்ளிகளில் நாளுக்கு நாள் வசதிகள் அதிகரிக்கப்படுவதால் பெற்றோர்களும், மாணவர்களும் தங்கள் கவனத்தை அரசுப் பள்ளிகள் பக்கம் திருப்பி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களும் படிப்பதற்கு வழி செய்யும் கட்டாய கல்வி சட்டத்தில் சேர்ந்தால் இலவசமாக படிக்க முடியும்.
தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இந்த கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது. இந்த திட்டத்தில் மாணவர்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் 1 கி.மீ. தொலைவில் உள்ள 5 பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதில் அவர்களுக்கு எந்த பள்ளியில் இடம் கிடைக்கிறதோ? அந்த பள்ளியில் சேரலாம். விண்ணப்பங்கள் அதிகமாக வரும் போது குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இதற்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி பெற்றோர்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில் சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்து அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு இன்னும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 2-ந்தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இதனால் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம் என எண்ணியிருந்த பெற்றோர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். அவர்கள் அறிவிப்பு வரும் என காத்திருந்து, காத்திருந்து ஏமாந்து போய் உள்ளனர்.
இதுவரை தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்காமல் இருந்துவிட்டு இன்னும் அறிவிப்பு வெளியாகாததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள். அறிவிப்பு வெளியிடப்படுமா? அல்லது வேறு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பதை அரசு உரிய காலக்கட்டத்தில் அறிவித்தால் நாங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வோம். ஆனால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளோம் என பெற்றோர்கள் வேதனையுடன் கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், வழக்கமாக இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு மே மாதத்தில் சேர்க்கை முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் அரசு அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மாணவர்கள் சேர்க்கை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எண்ணுகிறோம் என்றனர்.





















