La Ganesan : தஞ்சாவூர் TO மணிப்பூர்.. இல. கணேசன் ஆளுநரான கதை!
தமிழ்நாடு பாரதிய ஜனதாவிலிருந்து தொடர்ந்து ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்படும் காலம் இது.
தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலங்கானா மாநிலம் மற்றும் புதுச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்த வரிசையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
76 வயதான கணேசன் 1945ல் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தவர். அரசியல் ஈடுபாடு காரணமாக திருமணம் செய்துகொள்ளலாமல் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால் சமூக வேலைகளில் தன்னை இணைத்துக்கொண்டவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தது பின்னாளில் அவரை ராஜ்ய சபா எம்.பி. பதவி வரை உயர்த்தியது. இளைஞராக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் 70களில் எமர்ஜென்ஸி கலவர காலக்கட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பித்து சுமார் ஒருவருட காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
அந்த நாட்களில் தற்போதைய தமிழ்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுடன் நட்புறவில் இருந்துள்ளார். பின்னர் 1991ல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். இரண்டு முறையும் தோல்வியடைந்தாலும் பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று ராஜ்யசபா உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டார். மத்தியில் திமுக பாரதிய ஜனதாவுடன் நேச உறவில் இருந்த காலத்தில் மறைந்த திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கருணாநிதியுடனும் நட்புறவில் இருந்துள்ளார் கணேசன். கட்சியில் கணேசன் கணிவானவர் எனப் பெயர் எடுத்திருந்தாலும் அவர் மீதான சர்ச்சைக்குப் பஞ்சமில்லை. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக 2000ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கிருபாநிதிக்கும் லட்சுமணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருபாநிதியை அவரது சாதியைக் குறிப்பிட்டு தாக்கினார் கணேசன் என்ற குற்றச்சாட்டு உள்ளது. கட்சிப் பணத்தை கணேசன் கையாடல் செய்ததால்தான் அந்த மோதல் ஏற்பட்டதாகக் அப்போது பகிரங்கமாக குற்றம்சாட்டினார் கிருபாநிதி. இந்துக்களுக்கான கட்சியாக மட்டுமே அடையாளப்பட்டுவிட்ட பாரதிய ஜனதா, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு தலைமையை தேர்ந்தெடுத்த முதல் முயற்சி இவ்வாறுதான் தோல்வியில் முடிந்தது.
இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு 2015ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வந்தது. 2020ம்ஆண்டு கூட அவர் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்கிற செய்தி அரசல்புரசலாக வெளியானது. பின்னர் அந்தச் செய்தி மறுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது மணிப்பூரி ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கணேசன்.
ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த மாநிலத்தில் எதிர்கொள்ளும் தொடர் இயற்கைச் சீற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் இவருக்கான சவாலாக இருக்கும். தஞ்சை நெற்களஞ்சியத்திலிருந்து இந்திய வடகிழக்குக்குப் பயணிக்கும் இல.கணேசனுக்கு வாழ்த்துகள்.