Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
பழம்பெரும் நடிகர் ராஜேஷ் மரணம் குறித்து, சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், ராஜேஷின் மகள் திவ்யா உருக்கமாக கண்ணீருடன் வைத்துள்ள வேண்டுகோள் பற்றி பார்ப்போம்.

'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து, 'கன்னி பருவத்திலே' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறியவர் ராஜேஷ். இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ராஜேஷ், சினிமா துறையில் நடிகர் என்பதை தாண்டி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் உள்ளார்.
திரைப்படம் இயக்க வேண்டும் என்பது இவருடைய தீராத ஆசையாக இருந்த நிலையில், கடைசிவரை இவருடைய இந்த ஆசை நிறைவேறாமல் போனது. சமீபத்தில் ராஜேஷ் பற்றி பகிர்ந்து கொண்ட பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ் வி சேகர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அதை போல் ரியல் எஸ்டேட் மூலம், பல கோடி லாபம் பார்த்துள்ள ராஜேஷ், கே கே நகரில் ஷூட்டிங் பங்களாவை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய இடம் ஒன்றை வாங்கி அதை ஒரு ரிசார்ட்டாக மாற்றி அதையும் வாடகைக்கு விட்டுள்ளார். இப்படி பல்வேறு வகையில் பணம் இவருக்கு கொட்டிய நிலையில், கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.

இவர் மறைவுக்கு பின்னர், இவரைப் பற்றிய பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வர துவங்கியது. குறிப்பாக ராஜேஷ் சித்த மருத்துவத்தை புரமோட் செய்ததாக கூறப்பட்டது. அதேபோல் ராஜேஷை பார்க்க வந்த சித்த மருத்துவர், இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டு மட்டுமே இருந்ததால் ராஜேஷை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாமல் போனது என ராஜேஷின் சகோதரர் சத்தியன் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் பத்திரிகையாளர் பாலாஜி பிரபு என்பவர், ராஜேஷின் குடும்பத்தினரிடம் பேசியபோது அவர்கள் கூறிய தகவல்களை தற்போது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். இந்த தகவல் அதிகம் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த பேட்டியில், ராஜேஷ் பற்றி தவறாக பரவி வரும் தகவல்களுக்கு அவருடைய மகள் மற்றும் மகன் கொடுத்த விளக்கம் குறித்து பேசி உள்ளார்.
ராஜேஷுக்கு மிகவும் பழக்கமான அந்த சித்த மருத்துவர், தினமும் வாக்கிங் செல்லும்போது ராஜேஷை சந்தித்து விட்டு செல்வதை வழக்கமான வைத்திருந்தாராம். அன்றைய தினமும், அதே போல் அவர் ராஜேஷை சந்திக்க வந்தபோது, ராஜேஷ் மூச்சு திணறலால் கஷ்டப்படுவதை அறிந்து நாடி பிடித்து பார்த்துள்ளார். பல்ஸ் குறைவதை அறிந்து... உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க கூறியுள்ளார். பின்னர் ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ராஜேஷை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது. இதனை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.

சித்த மருத்துவரால் பல மணி நேரம் வீணானது, ராஜேஷ் அலோபதி மருத்துவத்தை தவிர்த்தார். சித்த மருத்துவத்தை ஊக்கப்படுத்தினார்.. என வெளியான கருத்துக்களும், தகவல்கள் உண்மை இல்லை என்று ராஜேஷின் குடும்பத்தினர் தற்போது உறுதி செய்துள்ளனர். அதேபோல் ராஜேஷின் மகள் திவ்யா கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் கண்ணீரோடு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் தன்னுடைய தந்தை மரணம் குறித்த வெளியாகும் தவறான தகவல்கள், ஏற்கனவே தந்தையை இழந்து வேதனையில் இருக்கும் எங்களுக்கு மேலும் வலியை தருகிறது. இதுபோன்று பரவும் தகவல்கள் உண்மையில்லை. அதை யாரும் நம்ப வேண்டாம் என திவ்யா கூறியுள்ளார்.




















