SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான மோதலால், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வைத்திருக்கும் சுமார் 22 பில்லியன் டாலர்கள் அரசு ஒப்பந்தங்கள் தற்போது ஆபத்தில் உள்ளன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான மோதலால், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வைத்திருக்கும் சுமார் 22 பில்லியன் டாலர்கள் அரசு ஒப்பந்தங்கள் தற்போது ஆபத்தில் உள்ளன. நேற்று, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே பொதுவெளியில் ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து, பல அமெரிக்க விண்வெளித் திட்டங்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன.
ட்ரம்ப் - மஸ்க் இடையேயான சமூக வலைதள மோதல்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மஸ்க் இடையே பொதுவெளியில் கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மஸ்க்கின் கூட்டாட்சி மானியங்களை நிறுத்துவதன் மூலம், பில்லியன் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்தலாம் என்று டிரம்ப் கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவிட்ட மஸ்க், விண்வெளி வீரர்களை கொண்டு செல்வதற்காக நாசா பயன்படுத்தும் முக்கிய வாகனமான ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலத்தின் பணியை நிறுத்தப் போவதாக மஸ்க் மிரட்டினார் .
ஆனாலும், அவரது பதிவிற்கு வந்த கமெண்ட் ஒன்றில், இருவரும் சாந்தமாகுங்கள் என்று ஒருவர் அறிவுரை கூறியதை ஏற்ற மஸ்க், "நல்ல அறிவுரை. சரி, நாங்கள் டிராகனின் பணியை நிறுத்த மாட்டோம்" என்று பதிலளித்தார். அமெரிக்காவில், செயற்கைக்கோள் ஏவுதல்கள் முதல் பணியாளர்களை விண்வெளிக்கு அனுப்புவது, விண்வெளிப் பயணங்கள் வரை, மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் அமெரிக்க விண்வெளி உள்கட்டமைப்பின் ஒரு மூலக்கல்லாக இருக்கிறது.
ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல், மஸ்க்கிற்கு சாதகமான செலவுக் கொள்கைகளை விமர்சித்த ட்ரம்ப், அமெரிக்க விண்வெளி நிறுவனத்தை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தனியார் விண்வெளி வீரர் ஜாரெட் ஐசக்மேனுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார். அவருக்கு பதிலாக, விண்வெளி அடிப்படையிலான பாதுகாப்பு மற்றும் சீனாவுடனான போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில், ஓய்வுபெற்ற விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல் ஸ்டீவன் குவாஸ்டை அமெரிக்க விண்வெளி நிறுவனத்திற்கு தலைமை தாங்க டிரம்ப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் எதிர்நோக்கியுள்ள அரசு ஒப்பந்த ரத்துகள்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஃபால்கன் 9 மற்றும் ஸ்டார்ஷிப் ஏவுதள அமைப்புகளுக்கான முக்கிய நாசா ஒப்பந்தங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு செயற்கைக்கோள் பணிகளுக்கான பென்டகன் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அரசு ஒப்பந்தங்களில் சுமார் 15 பில்லியன் டாலர்களை பெற்றுள்ளது. மேலும், ஒரு அமெரிக்க உளவுத்துறை நிறுவனத்திற்காக ஒரு ரகசிய கண்காணிப்பு செயற்கைக்கோள் வலையமைப்பை உருவாக்கி வருகிறது, அதொடு, ஸ்டார்ஷீல்ட் எனப்படும் ஸ்டார்லிங்கின் ராணுவ கிளையையும் ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கி வருகிறது.
ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நெட்வொர்க்கின் போட்டியாளர்களான எக்கோஸ்டார் மற்றும் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் ஆகியவற்றின் பங்குகள் இந்த வாரம் 16 சதவீதம் மற்றும் 8 சதவீதம் உயர்ந்தன. இது, டிரம்புடனான மஸ்க்கின் மோதலால், மாற்று வழிகளுக்கான கதவைத் திறக்கக்கூடும் என்ற முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கிறது.
போயிங், நார்த்ரோப் க்ரம்மன் மற்றும் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் அனைத்துமே, ஸ்பேஸ் எக்ஸின் சில செயல்பாடுகளை ஒரு நாள் மாற்றக்கூடிய வளரும் அமைப்புகளாகும். இதற்கிடையே, அமேசானின் ப்ராஜெக்ட் குய்பர் ஒரு சாத்தியமான ஸ்டார்லிங்க் போட்டியாளராக வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க அரசாங்கத்திற்கும் சேவைகளை வழங்கத் தொடங்குவதற்கு, போதுமான செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.





















