கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஆர்சிபி அணியும் கர்நாடக அரசுமே காரணம் என கர்நாடக கிரிக்கெட் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஆர்சிபி அணியும் கர்நாடக அரசுமே காரணம் என கர்நாடக கிரிக்கெட் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விவகாரத்தில் தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக கிரிக்கெட் சங்கம், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்:
ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்ற ஆர்.சி.பி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் மைதானத்திற்கு திரண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விவகாரத்தில் சட்ட விரோதமாக ஆட்களை கூட்டியது, மரணம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆர்சிபி அணி மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டி.என்.ஏ என்ற நிறுவனம் மீதும், கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீதும் பெங்களூரு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யக் கோரியும் தங்களின் மனுவை உடனடியாக விசாரிக்கக் கோரியும் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மனு தாக்கல் செய்தது.
பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்:
கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரகுராம் பட், செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெய்ராம் ஆகியோர் இணைந்து தாக்கல் செய்த மனுவில், "கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
வெற்றியைக் கொண்டாடுவது உண்மையில் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில்தான் நடந்தது. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் பல அமைச்சர்கள் முன்னிலையில் விதான சவுதாவில் பாராட்டு விழா நடைபெற்றது. மூத்த அதிகாரிகள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சிக்கியது சித்தராமையா அரசு?
கூட்டக் கட்டுப்பாடு மற்றும் தொடர்புடைய ஏற்பாடுகளை செய்வது RCB, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் காவல்துறையின் பொறுப்பு. இதுபோன்ற நிகழ்வுகளுக்கான மைதானத்தை வாடகைக்கு விடுவதும் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பொறுப்பே எங்களிடம் உள்ளது. பார்வையாளர்களையோ அல்லது ரசிகர்களையோ நிர்வகிப்பதில் நாங்கள் ஈடுபடுவதில்லை. அது, ஆர்சிபி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் காவல்துறையினருடையது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதிலிருந்து காணாமல் போன சங்கர் மற்றும் ஜெய்ராமைக் கண்டுபிடித்து கைது செய்ய காவல்துறையின் முயற்சிகள் எடுத்து வருகின்றன. நேற்று, ஆர்.சி.பி அதிகாரி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகளை கைது செய்ய சென்றபோது, அவர்களது வீடுகளில் அவர்கள் காணவில்லை.





















