கெட்டவார்த்தை பேசினால் சப்போர்ட் பன்றாங்க.. மகேந்திரன் கூறுவது சரியா.. விளாசிய விமர்சகர்
நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கெட்டவார்த்தை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பக்கம் சினிமா விமர்சகர்கள் மற்றொரு பக்கம் பொதுமக்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில் காரசார விவாதமாக மாறியுள்ளது. இதில், சினிமா விமர்சகர் பிரசாந்த் ஒரு படத்தை விமர்சனம் செய்யும் போது அந்த நடிகரின் தனிப்பட்ட பண்பையும் பார்க்க வேண்டியுள்ளது. அவரை ரசிகர்களிடம் தவறான பார்வைக்கு கொண்டு போகக்கூடாது என்பதை கருத்தில் வைத்து விமர்சனம் செய்வேன் என தெரிவித்தார். அப்போது எதிர்பக்கம் பேசிய ஒரு பெண்மணி சினிமா விமர்சகர் பிரசாந்தை பார்த்து நீங்கள் நடிகரின் பிஆர்ஓ-வாக இருக்கிறீர்களா என கேட்டார். படத்திற்கான விமர்சனத்தை மட்டும் சொன்னால் போதும் என தெரிவித்தார். பிறகு பேசிய பிரசாந்த் இதை மாற்றிக்கொள்கிறேன் என்றார்.
விமர்சனம் செய்யக்கூடாது
சினிமா விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள் என கோபிநாத் கேள்வி எழுப்பினார். அதற்கு பொதுமக்கள் பக்கம் இருந்து சினிமா விமர்சனமே வேண்டாம் என்று தான் கூறுகிறோம். படத்தை பார்த்து நாங்களே முடிவு செய்துகொள்கிறோம். ஒரு நல்ல படத்தை மக்களுக்கு பிடிக்காத படமாகவும், சகித்து கொள்ள முடியாத வகையில் வெளியாகும் படத்தை நல்ல படமாக சித்தரித்து பொய்யாக விமர்சனம் செய்கின்றனர். விமர்சனமே வேண்டாம் என வாதிட்டனர். அதற்கு அசைவு தெரிவிக்காத கோபிநாத் விமர்சனத்தில் குறைகள் இருந்தால் சுட்டி காட்டலாம் கோரிக்கை வைக்கலாம். ஆனால், விமர்சனமே வேண்டாம் என கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
கெட்டவார்த்தை பேசினால் தவறா?
கமல், ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் மகேந்திரன். ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வந்துள்ளார். மாஸ்டர் படத்திலும் சிறிய வயது பவானியாக வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அண்மையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் வெளியான லேபிள் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். இந்த தொடரில் அவர் அதிக கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இத்தொடரை பார்த்த ரசிகர்களும் கெட்ட வார்த்தைகள் அதிகம் இருப்பதாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், நீயா நானா நிகழ்வில் பங்கேற்ற மகேந்திரன் லேபிள் வெப்சீரிஸில் நான் நடித்திருந்தேன். அதில் கெட்டவார்த்தை பேசுவது போன்று நடித்திருந்தேன். அதற்கு இங்கிருக்கும் சினிமா விமர்சகர்கள் என்ன மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருந்தனர். இது என்னை மிகவும் பாதித்தது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் என மகேந்திரன் தெரிவித்தார்.
ஆதங்கப்பட்ட மகேந்திரன்
மேலும் கெட்டவார்த்தை பேசுவது குறித்து வடசென்னை பகுதியை சேர்ந்த தாய்மார்களிடம் கேட்ட போது கெட்டவார்த்தை பேசுவது ஒன்றும் தவறு இல்லை. கோபம் வந்தா வேறு எப்படி பேசுவது என என்னிடம் கூறினார்கள். எதார்த்தமாக பார்க்க வேண்டிய விசயத்தை ரொம்ப தவறானது போல் ஏன் பேசுகின்றனர் என மகேந்திரன் கேட்டார். அதற்கு சினிமா விமர்சகர் ஒருவர் இந்த கருத்திற்கு நான் உடன்படமாட்டேன். அந்த ஏரியா என்று தவறாக பேசுகிறார். கெட்டவார்த்தை பேசுவது ரொம்ப தவறான விஷயம். படங்களில் மிகவும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், இதுபோன்ற விசயங்களை Glorification செய்வது தவறு என சினிமா விமர்சகர் தெரிவித்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் மகேந்திரனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.




















