Sporting moments 2023: நடப்பாண்டில் இந்திய விளையாட்டுலகின் முக்கியமான தருணங்கள்..! கோலி முதல் பிரக்ஞானந்தா வரை
Indias sporting moments of the year 2023: இந்திய விளையாட்டுலகில் நடப்பாண்டில் நிகழ்ந்த மிக முக்கியமான தருணங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Indias sporting moments of the year 2023: இந்திய விளையாட்டுலகில் நடப்பாண்டில் கோலி, நீரஜ் சோப்ரா போன்ற வீரர்களால் நிகழ்த்தப்பட்ட மிக முக்கிய சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்திய விளையாட்டு:
நடப்பாண்டில் G20 உச்சிமாநாட்டின் தலைமைத்துவம், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு போன்ற பலதரப்பட்ட முக்கிய நிகழ்வுகள் இந்தியாவில் அரங்கேறின. அதேநேரம், இந்தியர்கள் விளையாட்டு அரங்கிலும் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்தனர். உலகக் கோப்பையின் போது தனது 50வது ஒரு நாள் சர்வதேச சதத்தை விராட் கோலி அடித்ததில் தொடங்கி ஆசிய மற்றும் பாரா ஆசிய விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்தது போன்ற பல நிகழ்வுகளும் அடங்கும். அந்த வகையில் நடப்பாண்டில் இந்திய விளையாட்டுலகில் நடந்த முக்கிய நிகழ்சுகள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
லிஸ்டில் டாப், ஆனாலும் உலகக் கோப்பை இல்லை:
கிரிக்கெட் தரவரிசையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி வலுவானதாக விளங்கியது. அதாவது மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்ததது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் அணி முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது. எட்டாவது முறையாக ஆசியக்கோப்பையையும் வென்றது. உலகக் கோப்பையில் 10 போட்டிகளிலும் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், அங்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பையை தவறவிட்டது.
சாதனைகளை முறியடித்த கோலி, ஷமி:
நடப்பாண்டில் அரங்கேறிய ஒருநாள் உலகக் கோப்பையானது கிரிக்கெட்டின் இரண்டு ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் முகமது ஷமி ஆகியோரால் நினைவு கூறப்படுகிறது. 35 வயதான கோலி 2023 உலகக் கோப்பையில் தனது 50 வது ஒருநாள் சதத்தை அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார். அதோடு, ஒரே உலகக் கோப்பை தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
மறுமுனையில், முகமது ஷமி கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் நான்குமுறை ஐந்து விக்கெட்டுகளை பதிவு செய்தார். இது எந்த ஒரு பந்து வீச்சாளராலும் இதுவரை நிகழ்த்தப்படவில்லை. 2023 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையுடன், இந்திய வீரர்களில் சிறந்த தனிநபர் பந்துவீச்சு என்ற பெருமையையும் பெற்றார்.
ஈட்டி எறிதலில் அபாரம்:
இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தற்போதைய ஒலிம்பியனாகவும், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், 26 வயதான அவர் நடப்பாண்டு தொடக்கத்தில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் (WAC) இந்தியாவின் முதல் பதக்கத்தையும் வென்றார். மேலும், கிஷோர் குமார் ஜெனா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
பேட்மிண்டனில் அசத்தல்:
பேட்மிண்டன் இரட்டையர்களான சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் ரங்கிரெட்டி ஆகியோர், சர்வதேச அரங்கில் அவர்களது அற்புதமான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனுடன் ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்தையும் திகைக்க வைத்தனர். பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) சார்பில் நடத்தப்பட்ட சுவிஸ் ஓபன், இந்தோனேசியா ஓபன் மற்றும் கொரியா ஓபனில் பட்டங்களை வென்று அசத்தினர். ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தையும், ஏப்ரல் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கத்தையும் கொண்டு வந்த பெருமை இந்த ஜோடிக்கு உண்டு. அக்டோபரில், BWF தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் இந்திய பேட்மிண்டன் இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர்.
FIFA உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி:
இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பெனால்டி ஷூட்அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தி இந்திய கால்பந்து அணி ஒன்பதாவது SAFF பங்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றது. தொடர்ந்து FIFA உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் குவைத்தை 1-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் வீழ்த்தியது. 22 ஆண்டுகளில் வெளிநாட்டில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் நாட்டின் முதல் வெற்றியாகும். இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் கத்தாரை 3-0 என வீழ்த்தியது.
ஆசிய விளையாட்டில் பதக்க வேட்டை:
ஆசிய விளையாட்டில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கங்களுடன் புது வரலாறு படைத்தது. வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் மற்றும் ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் தங்கம் வென்று அசத்தினர். இந்திய ஹாக்கி ஆண்கள் அணி உட்பட பல இந்திய விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், இந்திய அணி 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என 111 பதக்கங்களை வென்றது. இது இரண்டு போட்டிகளிலும் நாட்டின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும்.
செஸ் இளவரசர் பிரக்ஞானந்தா:
அஜர்பைஜானின் பாகுவில் நடந்த FIDE உலகக் கோப்பையில் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனிடம் வெற்ரி வாய்ப்பை இழந்தார். டை-பிரேக்கில் 1.5-0.5 என்ற கணக்கில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். செஸ் சாம்பியன் இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றது உட்பட மிகப்பெரிய சாதனைகளை படைத்தார்.