Chetan Sharma | சேத்தன் சர்மாவின் பிறந்தநாள் இன்று.. வரலாற்றில் இடம்பிடித்த ஹாட்ரிக் நாயகன்!!
முன்னாள் இந்திய வீரரான சேத்தன் சர்மா மீது இன்னுமே ஒரு உயர்ந்த மரியாதையும், பேரன்பும் அனைவருக்கும் இருக்கவே செய்கிறது. ஏனெனில், அவர் செய்த சாதனை அப்படியானது.
![Chetan Sharma | சேத்தன் சர்மாவின் பிறந்தநாள் இன்று.. வரலாற்றில் இடம்பிடித்த ஹாட்ரிக் நாயகன்!! Bcci chairman of selectors Chetan Sharma birthday special story Chetan Sharma | சேத்தன் சர்மாவின் பிறந்தநாள் இன்று.. வரலாற்றில் இடம்பிடித்த ஹாட்ரிக் நாயகன்!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/03/5b810366e98aea71da6db239ec92cc87_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் சேர்மனாக இருப்பவர் சேத்தன் சர்மா. சமீபத்தில் இவருடைய பெயர் அதிகமாக செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய விவகாரத்தில் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு மீது ரசிகர்கள் கடும் கோபத்திலேயே இருக்கின்றனர். ரசிகர்களை தாண்டி பொதுவான கிரிக்கெட் விரும்பிகளும் பத்திரிகையாளர்களும் கூட கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விதத்தை ரசிக்கவில்லை. அவர்களுக்குமே சேத்தன் சர்மாவின் மீது அதிருப்தி உண்டு. ஆனால், இந்த கோபம், அதிருப்தி, விமர்சனம் எல்லாம் தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா மீது மட்டுமே. முன்னாள் இந்திய வீரரான சேத்தன் சர்மா மீது இன்னுமே ஒரு உயர்ந்த மரியாதையும், பேரன்பும் அனைவருக்கும் இருக்கவே செய்கிறது. ஏனெனில், அவர் செய்த சாதனை அப்படியானது.
சமீபத்தில் வெளியான 83 படத்தில் ஒரு வசனம் வரும். 'டிரெய்னிங் கேம்ப்ல ஒரு நாள் முழுக்க Fast Bowling வீசிட்டு வர எனக்கு வெறும் ரெண்டே ரொட்டி மட்டும்தான் கொடுப்பாங்க. ஒரு Fast Bowler க்கு இவ்ளோதானான்னு கேட்டா...இந்தியாவுல Fast Bowler னு யாருமே கிடையாதுனு சொல்லுவாங்க' என கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரன்வீர் சிங் வசனம் பேசுவார். ஒரு காலத்தில் இந்தியாவில் வேகப்பந்து வீச்சிற்கு இருந்த மதிப்பு இதுதான். முழுக்க முழுக்க ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். கபில்தேவின் வருகையும் அவரின் அட்டகாசமான பெர்ஃபார்மென்ஸுமே இந்தியாவில் மீண்டும் வேகப்பந்து வீச்சு உயிர்த்தெழ காரணமாக அமைந்திருந்தது. சேத்தன் சர்மா கபில்தேவையும் கவாஸ்கரையும் பார்த்து வளர்ந்தவர். யாஸ்பால் சர்மாவின் சொந்தக்காரார்.
மிதவேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சர்மா செய்த சாதனை அவர் பார்த்து வளர்ந்த கபில்தேவே செய்திடாதது. ஏன் அப்போது கிரிக்கெட் உலகில் வேகப்பந்து வீச்சில் கோலோச்சிக் கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸின் 'Four horsemen' வீரர்கள் கூட செய்திடாத சாதனை அது. ஏவுகணையாக தாக்கும் கரீபிய வேகப்பந்து வீச்சாளர்களே செய்திடாத சாதனையை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் செய்திருக்கிறார் எனும் போதே அதன் வீரியத்தை உணர்ந்து கொள்ள முடியும். சேத்தன் சர்மா அப்படி என்னதான் செய்தார்?
உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்துவீச்சாளர் சேத்தன் சர்மாவே. 1975 முதல் நடந்து உலகக்கோப்பை தொடர்களில் ஆண்டி ராபர்ட்ஸால், மைக்கேல் ஹோல்டிங்கால், கார்னரால் கூட ஹாட்ரிக் எடுத்திருக்க முடியவில்லை. 1987 இந்தியாவில் வைத்து நடைபெற்ற உலகக்கோப்பையில் சேத்தன் சர்மா இந்த சாதனையை செய்திருந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 21 தான்.
17 வயதில் 1983 இல் இந்திய அணிக்கு அறிமுகமான சேத்தன் சர்மாவுக்கு கிடைத்த முதல் அடையாளம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. 1986 இல் ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. அந்த ஓவரை சேத்தன் சர்மாவே வீசியிருந்தார். கடைசி பந்தை யார்க்கராக வீச முயன்றவர் தவறிப்போய் Full toss ஆக வீச அந்த பந்தில் ஜாவேத் மியான்தத் சிக்சரை அடித்து பாகிஸ்தானை வெல்ல வைத்திருப்பார். அந்த கடைசி ஓவரை தவிர சேத்தன் சர்மா அந்த போட்டியில் சிறப்பாகவே வீசியிருந்தார். ஆனாலும், போட்டியில் தோற்றதற்கு சேத்தன் சர்மாதான் காரணம் என ரசிகர்கள் அதிருப்தியுற்றனர்.
சேத்தன் சர்மா கடினமான சமயங்களில் திணறிய போதெல்லாம் கபில்தேவ் அவருக்கு ஆதரவாக நின்றார். 1987 உலகக்கோப்பைக்கு முன்பாக சேத்தன் சர்மாவின் கையில் காயம் ஏற்பட்டுவிடவே மருத்துவர்களும் நிர்வாகிகளும் சேத்தன் சர்மாவால் இந்த உலகக்கோப்பையில் ஆட முடியாது எனக்கூறினர். ஆனால் கபில்தேவ், என்ன ஆனாலும் பரவாயில்லை சேத்தன் சர்மா என்னுடைய அணியில் இருந்தே ஆக வேண்டும் எனக்கூறி காயமுற்றிருந்த சேத்தன் சர்மாவை உலகக்கோப்பைக்கு அழைத்து சென்றார்.
கபில்தேவ் தன்மீது வைத்த நம்பிக்கைக்கு கைமாறாக சேத்தன் சர்மா வரலாற்று சாதனை செய்து அசத்தினார். கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்த 3 பந்துகளில் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ரூதர்போர்டு, இயான் ஸ்மித், சாட்ஃபீல்ட் ஆகிய மூவரையும் போல்டாக்கி ஹாட்ரிக் எடுத்தார். உலகக்கோப்பை வரலாற்றில் அதுவரை யாருமே இப்படி ஹாட்ரிக் எடுத்ததே இல்லை. சேத்தன் சர்மாவே முதல் முறையாக அப்படி ஒரு சாதனையை செய்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான அந்த ஒரு ஓவரினால் தோல்வியின் அடையாளமாக தூற்றப்பட்ட சேத்தன் சர்மா இந்த ஒரு ஹாட்ரிக் மூலம் அந்த அடையாளத்தை மாற்றி வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்தார். ஒவ்வொரு உலகக்கோப்பையின் போது, ஒவ்வொரு உலகக்கோப்பை ஹாட்ரிக்கின் போதுமே சேத்தன் சர்மாவின் பெயர் கிரிக்கெட் உலகினால் நினைவுகூறப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இனியும் அப்படியே!
ஹாப்பி பர்த்டே சேத்தன் சர்மா!!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)